ADDED : மார் 14, 2026 10:56 PM

புதுடில்லி: ''போட்டி விதிமுறையில் கவனமாக மாற்றம் செய்ய வேண்டும்,'' என, இந்தியாவின் செய்னா நேவல் தெரிவித்தார்.
பாட்மின்டன் போட்டியில் ஒரு செட்டை கைப்பற்ற 21 புள்ளி போதுமானது. இம்முறையில், உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) மாற்றம் செய்ய உள்ளது. இனி, 15 புள்ளி எடுத்தாலே ஒரு செட்டை வெல்லலாம். வரும் ஏப். 25ல் டென்மார்க்கில், பி.டபிள்யு.எப்.,ன் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் புதிய முறையில் போட்டிகள் நடத்தப்படும். இதேபோல, ஆசியா, ஐரோப்பாவில் நடக்கும் 5 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடர்களின் ஒற்றையரில் மாற்றம் செய்ய உள்ளது. நேரடியாக 'நாக்-அவுட்' போட்டி நடத்தாமல், 'குரூப்' முறையில் வீரர்கள் லீக் சுற்றில் விளையாடி, பின் 'நாக்-அவுட்' போட்டிக்கு தகுதி பெறுவர்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீராங்கனை செய்னா நேவல் கூறுகையில், ''போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்ய விரும்பினால் கவனமாக செயல்பட வேண்டும். அது, போட்டியின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள 21 புள்ளி முறை நன்றாக உள்ளது. நீண்ட காலமாக இம்முறையில் தான் விளையாடி வருகின்றனர். இதுவே போதுமானது,'' என்றார்.

