ADDED : ஏப் 13, 2024 10:45 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் பங்கேற்க உள்ளார் லக்சயா சென்.
பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11 ல் நடக்கவுள்ளது. இதற்கான பாட்மின்டன் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 'டாப்-16' இடத்திலுள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும். இந்தியா சார்பில் இதுவரை ஆண்கள் ஒற்றையரில், உலகத் தரவரிசையில் 9 வது இடத்திலுள்ள பிரனாய், பெண்கள் ஒற்றையரில் 'நம்பர்-12' வீராங்கனை, ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்ற சிந்து பங்கேற்க தகுதி பெற்றனர்.
ஆண்கள் இரட்டையரில் உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, பெண்கள் இரட்டையரில் 'நம்பர்-20' ஆக உள்ள அஷ்வினி, தனிஷா ஜோடி ஒலிம்பிக்கில் களமிறங்க காத்திருக்கிறது. தற்போது இந்த வரிசையில் இணைகிறார் இந்திய இளம் வீரர் லக்சயா சென்.
2024 ஆண்டு துவக்கத்தில் 'டாப்-20' பட்டியலில் இடம் பெறாத இவர், திடீரென எழுச்சி பெற்றார். பிரெஞ்ச் ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து 'நம்பர்-13' இடத்துக்கு முன்னேறினார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக் தகுதி போட்டிகள் முடிந்துவிட்டன.
அடுத்து வரும் தொடர்களில் இவரது செயல்பாடு, ஒலிம்பிக் தரவரிசையில் பாதிப்பு ஏற்படுத்தாது. இதனால் லக்சயா, முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதியானது.
