இரண்டாவது சுற்றில் சிந்து: இந்தோனேஷிய பாட்மின்டனில்
இரண்டாவது சுற்றில் சிந்து: இந்தோனேஷிய பாட்மின்டனில்
ADDED : ஜன 21, 2026 10:06 PM

ஜகார்த்தா: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த், லக்சயா சென் வெற்றி பெற்றனர்.
இந்தோனேஷியாவில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் மனாமி சுய்சூ மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-16, 21-17 என சீனதைபேயின் பாய் யு போவை தோற்கடித்தார்.
இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 20-22, 17-21 என டென்மார்க்கின் ஜூலி டவால் ஜேக்கப்சனிடம் வீழ்ந்தார். மற்ற முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், தன்வி சர்மா தோல்வியடைந்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வடானபே மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 21-13, 16-21, 21-14 என சீனதைபேயின் வாங் டிசூ வெய்யை வென்றார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், பிரனாய், ஆயுஷ் ஷெட்டி தோல்வியடைந்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ, ரோஹன் கபூர் - ருத்விகா ஜோடி தோல்வியடைந்தன.
