ADDED : பிப் 15, 2024 10:57 PM

துபாய்: 'கிளப்' கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஜாவேத்திற்கு 17 ஆண்டு, 6 மாதம் தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த 'கிளப்' கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஜாவேத். அபுதாபியில் நடக்கும் 'டி-10' தொடரில் 2021ல் பங்கேற்ற போது, மூன்று போட்டிகளில் 'மேட்ச் பிக்சிங்' செய்தது தெரிய வந்தது. இதுகுறித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார்.
இதையடுத்து ரிஸ்வானுக்கு, 17 ஆண்டு, 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. கிரிக்கெட் அரங்கில் விதிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தடையாக இது அமைந்தது. முன்னதாக ஜிம்பாப்வே வீரர் ராஜன் நாயருக்கு, 2018ல் 20 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,'' அடுத்தடுத்து 'பிக்சிங்' செய்ததால், ரிஸ்வானுக்கு நீண்ட தடை விதிக்கப்பட்டது. பல்வேறு வகை போட்டிகளில் ஏதாவது ஒரு வழியில் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சிக்கும் மற்ற வீரர்களுக்கு இது பாடமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளது.
இப்பிரச்னையில் சிக்கி வங்கதேச வீரர் நாசிர் ஹொசைன், ஐ.சி.சி., விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்ததால், 2 ஆண்டு மட்டும் தடை விதிக்கப்பட்டது.

