/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஞ்சாத அபிஷேக் சர்மா சதம்: 55 பந்தில் 141 ரன் விளாசல்
/
அஞ்சாத அபிஷேக் சர்மா சதம்: 55 பந்தில் 141 ரன் விளாசல்
அஞ்சாத அபிஷேக் சர்மா சதம்: 55 பந்தில் 141 ரன் விளாசல்
அஞ்சாத அபிஷேக் சர்மா சதம்: 55 பந்தில் 141 ரன் விளாசல்
ADDED : ஏப் 13, 2025 12:08 AM

ஐதராபாத்: கடின இலக்கை அஞ்சாமல் விரட்டிய ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா, 55 பந்தில் 141 ரன் குவித்து வெற்றிக்கு கைகொடுத்தார். பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஷ்ரேயஸ் அபாரம்: பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (36 ரன், 4 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (42 ரன், 7 பவுண்டரி) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கம்மின்ஸ், ஜீஷான் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஷ்ரேயஸ், முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 22 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது எஷான் மலிங்கா பந்தில் நேஹல் வதேரா (27) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஷ்ரேயஸ், மலிங்கா வீசிய 17வது ஓவரில் 4 பவுண்டரி அடித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 18வது ஓவரில் மேக்ஸ்வெல் (3), ஷ்ரேயாஸ் (82 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். ஷமி வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 4 சிக்சர் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (34), யான்சென் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபிஷேக் சதம்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி கலக்கல் துவக்கம் தந்தது. யான்சென் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரி விரட்டினார் அபிஷேக். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார் ஹெட். மேக்ஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அபிஷேக், 19 பந்தில் அரைசதம் விளாசினார். சகால் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹெட், 31 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்த போது சகால் 'சுழலில்' ஹெட் (66 ரன், 3 சிக்சர், 9 பவுண்டரி) சிக்கினார்.
பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த அபிஷேக், 40 பந்தில் சதத்தை எட்டினார். சகால் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட அபிஷேக் (141 ரன், 10 சிக்சர், 14 பவுண்டரி), அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' வெளியேறினார். சஷாங்க் சிங் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கிளாசன், யாஷ் தாகூர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.
ஐதராபாத் அணி 18.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 247 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிளாசன் (21), இஷான் கிஷான் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
141 ரன்
பிரிமியர் லீக் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்கள் வரிசையில் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா (141) 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் பெங்களூருவின் கெய்ல் (175* ரன், எதிர்: புனே, 2013), கோல்கட்டாவின் பிரண்டன் மெக்கலம் (158* ரன், எதிர்: பெங்களூரு, 2008) உள்ளனர்.
இரண்டாவது அதிகபட்சம்
பிரிமியர் லீக் அரங்கில் பஞ்சாப் அணி, தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை (245/6) பதிவு செய்தது. கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த போட்டியில் 262/2 ரன் (எதிர்: கோல்கட்டா) எடுத்தது பஞ்சாப் அணியின் சிறந்த ஸ்கோராக உள்ளது.
* பிரிமியர் லீக் அரங்கில், அதிக முறை, ஒரு இன்னிங்சில் 200 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் பஞ்சாப் அணி (27 முறை) 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் சென்னை (33 முறை), பெங்களூரு (31) அணிகள் உள்ளன.
'ரன் வள்ளல்' ஷமி
ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி (75 ரன், 4 ஓவர், 0 விக்.,), பிரிமியர் லீக் அரங்கில், 2வது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். சமீபத்தில் (மார்ச் 23) ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர், 4 ஓவரில் 76/0 ரன் (எதிர்: ஐதராபாத்) விட்டுக்கொடுத்தது பிரிமியர் லீக் வரலாற்றின் மோசமான பந்துவீச்சானது.