/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
11 வீரர்களும் பந்துவீச்சு: 'டி-20' அரங்கில் சாதனை
/
11 வீரர்களும் பந்துவீச்சு: 'டி-20' அரங்கில் சாதனை
ADDED : நவ 29, 2024 09:40 PM

மும்பை: மணிப்பூர் அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் டில்லி அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர்.
இந்தியாவில், சையது முஷ்தாக் அலி டிராபி கிரிக்கெட் ('டி-20') தொடர் நடக்கிறது. நேற்று, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில், டில்லி அணி (124/6, 18.3 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூர் அணியை (120/8, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் விக்கெட் கீப்பர் அனுஜ் ரவாத் உட்பட டில்லி அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர். ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில், ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசிய நிகழ்வு முதன்முறையாக அரங்கேறியது. இதற்கு முன், அதிகபட்சம் 9 வீரர்கள் பந்துவீசினர்.
ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இப்படி பந்துவீசியது இரண்டாவது முறை. கடந்த 2002ல் ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர். இப்போட்டி 'டிரா' ஆனது.
பாண்ட்யா விளாசல்இந்துாரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பரோடா அணி (115/3, 11.2 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை (109/9, 20 ஓவர்) வீழ்த்தியது. பரோடா அணியின் ஹர்திக் பாண்ட்யா, 23 பந்தில் 47 ரன் (5 சிக்சர், 3 பவுண்டரி) குவித்தார். இதில் பர்வேஸ் சுல்தான் வீசிய ஒரே ஓவரில் 28 ரன் விளாசினார்.
ஷர்துல் சொதப்பல்ஐதராபாத்தில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் கேளரா அணி (234/5, 20 ஓவர்) 43 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை (191/9, 20 ஓவர்) வீழ்த்தியது. மும்பை அணி வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர், 4 ஓவரில், 69 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது, சையது முஷ்தாக் டிராபியில் மோசமான பந்துவீச்சானது.
தமிழகம் தோல்விஇந்துாரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி (114/10, 18.5 ஓவர்) 19 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் (133/9, 20 ஓவர்) வீழ்ந்தது. தமிழக கேப்டன் ஷாருக்கான் (33) ஆறுதல் தந்தார்.