/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோலி, ஜாக்ஸ் விளாசல்
/
பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோலி, ஜாக்ஸ் விளாசல்
பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோலி, ஜாக்ஸ் விளாசல்
பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோலி, ஜாக்ஸ் விளாசல்
ADDED : ஏப் 29, 2024 12:14 AM

ஆமதாபாத்: வில் ஜாக்ஸ்(100), கோலி(70) விளாச, பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. சின்ன 'பிரேக்' எடுத்த மேக்ஸ்வெல், மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பினார். 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் டுபிளசி, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சுதர்சன் நம்பிக்கை
குஜராத் அணிக்கு சகா (5) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் வலையில் கேப்டன் சுப்மன் கில் (16) சிக்கினார். பின் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக் கான் அசத்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 45 பந்தில் 86 ரன் சேர்த்தனர். 24 பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார் ஷாருக். இவர், 58 ரன்னுக்கு சிராஜ் 'வேகத்தில்' போல்டானார். மறுபக்கம் 34 பந்தில் அரைசதம் எட்டிய சுதர்சன் தனது விளாசலை தொடர்ந்தார். கிரீன் ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது. சுதர்சன் (84 ரன், 8 பவுண்டரி, 4 சிக்சர்), மில்லர் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.
மின்னல் சதம்
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு டுபிளசி நல்ல துவக்கம் தந்தார். அஸ்மதுல்லா ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். சாய் கிஷோர் பந்தில் டுபிளசி(24) அவுட்டானார். பின் கோலி, வில் ஜாக்ஸ் சேர்ந்து வாணவேடிக்கை காட்டினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 166 ரன் சேர்த்தனர். 32 பந்தில் அரைசதம் எட்டினார் கோலி. மோகித் ஓவரில் ஜாக்ஸ் 29 ரன்(4, 6, 7(நோ-பால்), 2, 6, 4) விளாசினார். ரஷித் வீசிய அடுத்த ஓவரில் (16) ஜாக்ஸ் 28 ரன் (6,6,4,6,6) எடுத்தார். இதில் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர் சதம் எட்ட, கோலி வியந்து பார்த்தார். பெங்களூரு அணி 16 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜாக்ஸ் (100 ரன், 5 பவுண்டரி, 10 சிக்சர்), கோலி (70 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
41 பந்து
பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் (இங்கி.,) 31 பந்தில் அரைசதம் எட்டினார். அடுத்த 10 பந்தில் 100 ரன்னை தொட்டு சாதித்தார். ஐ.பி.எல்., அரங்கில் 5வது அதிவேக சதம் (41 பந்து) அடித்தார்.
500 ரன்
அபாரமாக ஆடிய கோலி, ஐ.பி.எல்., அரங்கில் 54வது அரைசதம் எட்டினார். இந்த தொடரில் 500 ரன்னை தொட்ட (10 போட்டி) முதல் வீரரானார்.

