/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அன்ஷுல் காம்போஜ் சாதனை: ரஞ்சி கோப்பையில் 10 விக்கெட் சாய்த்தார்
/
அன்ஷுல் காம்போஜ் சாதனை: ரஞ்சி கோப்பையில் 10 விக்கெட் சாய்த்தார்
அன்ஷுல் காம்போஜ் சாதனை: ரஞ்சி கோப்பையில் 10 விக்கெட் சாய்த்தார்
அன்ஷுல் காம்போஜ் சாதனை: ரஞ்சி கோப்பையில் 10 விக்கெட் சாய்த்தார்
UPDATED : நவ 15, 2024 10:51 PM
ADDED : நவ 15, 2024 10:50 PM

ரோஹ்தக்: ஹரியானாவின் அன்ஷுல் காம்போஜ், ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்து சாதனை படைத்தார்.
ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'சி' பிரிவு லீக் போட்டியில் கேரளா, ஹரியானா அணிகள் விளையாடுகின்றன. கேப்டன் சச்சின் பேபி (52), அக்சய் சந்திரன் (59), ரோஹன் குன்னும்மல் (55) கைகொடுக்க கேரளா அணி முதல் இன்னிங்சில் 291 ரன் எடுத்தது. 'வேகத்தில்' மிரட்டிய ஹரியானாவின் அன்ஷுல் காம்போஜ், 10 விக்கெட் சாய்த்தார். மொத்தம் 30.1 ஓவர் வீசிய இவர், 49 ரன் விட்டுக்கொடுத்தார். இதில் 9 'மெய்டன் ஓவர்' அடங்கும்.
மூன்றாவது பவுலர்: ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றிய 3வது பவுலரானார் அன்ஷுல் காம்போஜ். ஏற்கனவே பெங்காலின் பிரேமாங்ஷு சாட்டர்ஜி (10/20, எதிர்: அசாம், 1956), ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10/78, எதிர்: விதர்பா, 1985) இப்படி சாதித்திருந்தனர்.
கும்ளே வழியில்: முதல்தர போட்டியில், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்த 6வது இந்திய பவுலரானார் அன்ஷுல் காம்போஜ். ஏற்கனவே பாம்பே அணியின் சுபாஷ் குப்தே (10/78, எதிர்: பாக்., லெவன், 1954-55), பெங்காலின் பிரேமாங்ஷு சாட்டர்ஜி (10/20, எதிர்: அசாம், 1956, ரஞ்சி கோப்பை), ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10/78, எதிர்: விதர்பா, 1985, ரஞ்சி கோப்பை), இந்தியாவின் அனில் கும்ளே (10/74, எதிர்: பாக்., 1999, டெஸ்ட்), கிழக்கு மண்டல அணியின் தேபாஷிஷ் மொஹந்தி (10/46, எதிர்: மேற்கு மண்டலம், 2000-01, துலீப் டிராபி) இச்சாதனை படைத்திருந்தனர்.
தமிழகம் அபாரம்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 291 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி 324/6 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் முகமது அலி (91) கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 438 ரன் எடுத்தது. பின் 2வது இன்னிங்சை துவக்கிய ரயில்வேஸ் அணி, ஆட்டநேர முடிவில் 169/5 ரன் எடுத்திருந்தது. தமிழகம் சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.