/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உடலும் உள்ளமும் நலந்தானா: பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைஸ்'
/
உடலும் உள்ளமும் நலந்தானா: பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைஸ்'
உடலும் உள்ளமும் நலந்தானா: பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைஸ்'
உடலும் உள்ளமும் நலந்தானா: பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைஸ்'
ADDED : நவ 10, 2025 10:57 PM

புதுடில்லி: '' உடல் அளவில் வலிமையாக இருந்தால் தான் மனமும் பலமாக இருக்கும். இந்திய வீரர்கள் 'பிட்' ஆக இருக்க வேண்டும்,'' என காம்பிர் வலியுறுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட காம்பிர், 16 மாத காலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20' தொடரை இந்தியா வெல்ல உதவினார். அடுத்த ஆண்டு (பிப். -மார்ச்) இந்தியா, இலங்கையில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை இவருக்கு சவாலானது. இதில் இந்தியா 'சாம்பியன்' பட்டத்தை தக்க வைக்க வேண்டும்.
இது குறித்து காம்பிர் கூறியது: வீரர்களின் உடற்தகுதி அடிப்படையில் பார்த்தால், நாம் இன்னும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகவில்லை. இதை பற்றி விவாதித்து வருகிறோம். களத்தில் வீரர்கள் துடிப்பாக செயல்பட, உடல் அளவில் 'பிட்' ஆக இருப்பது அவசியம். உடல் அளவில் வலிமையாக இருந்தால் தான், மனதளவிலும் பலமாக இருக்க முடியும். போட்டிகளின் போது ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க உடல், மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். உலக கோப்பைக்கு இன்னும் 3 மாதம் இருப்பதால், இலக்கை எட்டிவிடலாம்.
ஆக்ரோஷ 'பவுலிங்': 'டி-20' போட்டிகளில், பேட்டிங் மட்டுமல்ல பவுலிங்கிலும் ஆக்ரோஷமாக செயல்பட விரும்புகிறோம். இதன் காரணமாக தான் சமீபத்திய ஆசிய கோப்பை தொடரின் 'பவர் பிளேயில்' (முதல் 6 ஓவர்), பும்ராவுக்கு 3 ஓவர் கொடுத்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 'மிடில் ஓவரில்' விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்ற வருண் சக்ரவர்த்தி, குல்தீப் உள்ளனர்.
'ஆல்-ரவுண்டர்' அவசியம்: விளையாடும் 'லெவனில்' ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் என 'ஆல்-ரவுண்டர்கள்' அதிகம் இருப்பது பலம். 'டி-20', 50 ஓவர் போட்டியில் 'மிடில் ஆர்டரில்' பேட் செய்யும் வீரர்கள், ஒரு சில ஓவர் பந்துவீசினால் நல்லது. 7-8 பேர் பந்துவீசும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சமீப காலமாக வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு, வெற்றிக்கு கைகொடுக்கிறது. 'பேட்டிங்' வரிசையில் 5வது இடத்தில் அக்சர் படேல் அசத்துகிறார். எந்த கட்டத்திலும் கலக்கலாக பந்துவீசுகிறார்.
'சூப்பர்' சுப்மன் கில்: சவாலான பணியில் களமிறக்கி வீரர்களின் மனஉறுதியை சோதிக்க வேண்டும். உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக இளம் சுப்மன் கில்லை நியமித்தோம். ரன் மழை பொழிந்த இவர், அணியை சிறப்பாக வழிநடத்தினார். தொடரை 2-2 என 'டிரா' செய்து திறமையை நிரூபித்தார்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.
நேர்மை முக்கியம்
ஹர்ஷித் ராணாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காம்பிர், சில போட்டிகளில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவை புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்தது. இது பற்றி காம்பிர் கூறுகையில்,''திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலிருந்து விளையாடும் 11 பேரை தேர்வு செய்வது பயிற்சியாளராக கடினமான பணி. சரியான கூட்டணியை தேர்வு செய்கிறோம். வாய்ப்பு கிடைக்காத வீரர் அதிருப்தி அடையலாம். அதற்கான காரணத்தை அவரிடம், பயிற்சியாளர் நேர்மையாக சொல்ல வேண்டும். தற்போது 'டிரஸ்சிங் ரூமில்' நடக்கும் விஷயங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உள்ளன,''என்றார்.
ரோகித், கோலி நிலை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என இழந்தது. சிட்னியில் நடந்த 3வது போட்டியில் 'சீனியர்' வீரர்களான ரோகித் (121*), கோலி (74*) கைகொடுக்க, இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. 3 போட்டியில் 201 ரன் எடுத்த ரோகித், தொடர் நாயகன் விருது வென்றார். இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறுத்த காம்பிர் கூறுகையில்,''வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு முக்கியமல்ல. பயிற்சியாளராக தொடரை இழந்ததை ஒருபோதும் கொண்டாட முடியாது,''என்றார்.

