/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இரண்டே நாளில் வென்ற இங்கிலாந்து * 14 ஆண்டுக்குப் பின் ஆஸி., மண்ணில் அசத்தல்
/
இரண்டே நாளில் வென்ற இங்கிலாந்து * 14 ஆண்டுக்குப் பின் ஆஸி., மண்ணில் அசத்தல்
இரண்டே நாளில் வென்ற இங்கிலாந்து * 14 ஆண்டுக்குப் பின் ஆஸி., மண்ணில் அசத்தல்
இரண்டே நாளில் வென்ற இங்கிலாந்து * 14 ஆண்டுக்குப் பின் ஆஸி., மண்ணில் அசத்தல்
ADDED : டிச 27, 2025 11:11 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய மண்ணில் 14 ஆண்டுக்குப் பின் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து. 'பாக்சிங் டே' போட்டியில் இரண்டே நாளில் வென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 3-0 என தொடரை கைப்பற்றியது. 4வது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் காணப்பட, பவுலர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட் சரிய, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 152, இங்கிலாந்து 110 ரன்னில் சுருண்டன.
முதல் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்த ஆஸ்திரேலியா, 46 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
கார்ஸ் அபாரம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆடுகளம் மீண்டும் பவுலர்களுக்கு கைகொடுக்க, போலண்ட் (6), வெதரால்டு (5), லபுசேன் (8), கவாஜா (0), கேரி (4) என ஒவ்வொருவரும் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ஹெட் அதிகபட்சம் 46 ரன்னுக்கு கார்ஸ் 'வேகத்தில்' போல்டானார்.
பின் வரிசையில் கேமரான் கிரீன் மட்டும் 19 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் கைவிட, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 132 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்தின் கார்ஸ் 4, ஸ்டோக்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.
நல்ல துவக்கம்
இரண்டாவது இன்னிங்சில் 175 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து அணி. டக்கெட் (34), கிராலே (37) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்து கைகொடுத்தது. பெத்தெல் 46 பந்தில் 40 ரன் எடுக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது இங்கிலாந்து. ஜோ ரூட் (15) நிலைக்கவில்லை.
கடைசியில் ஹாரி புரூக் ஒரு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 32.2 ஓவரில் 178/6 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புரூக் (18), ஸ்மித் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 7 விக்கெட் (5+2) சாய்த்த டங்க், ஆட்ட நாயகன் ஆனார்.
129 ஆண்டில்...
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இது 2 நாளில் முடிந்தது. தற்போது மெல்போர்ன் போட்டியும் 2 நாளில் முடிந்தது. இதையடுத்து 129 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில், முதன் முறையாக ஒரே தொடரில் இரண்டு டெஸ்ட், 2 நாளில் முடிந்தன.
* தவிர, முதல் நான்கு டெஸ்ட், 13 நாளில் (2+4+5+2) முடிந்தன.
18 போட்டி
ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2011, ஜன. 3-7ல் நடந்த சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி 83 ரன்னில் ஆஸ்திரேலியாவை வென்றது.
இதன் பின் பங்கேற்ற 18 டெஸ்டில் 16ல் தோற்றது. 2 போட்டி 'டிரா' ஆகின. தற்போது 14 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக, இங்கிலாந்து வென்றது.
479 பந்து
ஆஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 479 பந்து மட்டும் பேட்டிங் செய்தது. 1928 ஆஷஸ் தொடரின் பிரிஸ்பேன் போட்டியில் 457 பந்தில் இரு முறை ஆல் அவுட்டானது முதலிடத்தில் உள்ளது.
1932க்குப் பின்...
ஆஷஸ் தொடரில் 1932க்குப் பின், இரு அணியின் எந்த ஒரு பேட்டரும் அரைசதம் அடிக்காத நிகழ்வு நடந்தது. அதிகபட்சம் ஹெட் 46 ரன் எடுத்தார்.
5468 நாள்
ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்து அணி கடைசியாக 2011, ஜன. 7ல் வெற்றி பெற்றது. இதன் பின், 5468வது நாளில் இங்கு வெற்றியை பதிவு செய்தது.
92,045 பேர்
மெல்போர்ன் டெஸ்ட் முதல் நாளில் 94,199 பேர் பார்த்து ரசித்தனர். நேற்று இரண்டாவது அதிகபட்சமாக 92,045 பேர் பார்த்தனர்.
ரூ. 60.59 கோடி இழப்பு
மெல்போர்னில் நடந்த 'பாக்சிங் டே' டெஸ்ட் இரண்டு நாளில் முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டுக்கு ரூ. 60.59 கோடி வரை இழப்பு ஏற்பட உள்ளது.

