/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜோ ரூட் ஜோரான சதம் * ஆஸ்திரேலிய அணி பதிலடி
/
ஜோ ரூட் ஜோரான சதம் * ஆஸ்திரேலிய அணி பதிலடி
ADDED : ஜன 05, 2026 11:29 PM

சிட்னி: ஜோ ரூட் சதம் கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 384 ரன் எடுத்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட், சிட்னியில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 211/3 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் (72), புரூக் (78) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரூட் அபாரம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. புரூக் 84 ரன்னில் அவுட்டாக, கேப்டன் ஸ்டோக்ஸ் 'டக்' அவுட்டானார். ஸ்மித் 46 ரன்னில், லபுசேன் பந்தில் வீழ்ந்தார். மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட், டெஸ்டில் 41 வது சதம் எட்டினார். வில் ஜாக்ஸ் 27 ரன் எடுத்தார்.
ரூட் 160 ரன் எடுத்த போது, நேசர் பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நேசர் 4, ஸ்டார்க் 2, போலண்ட் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஹெட் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், வெதரால்டு ஜோடி துவக்கம் தந்தது. வெதரால்டு 21 ரன்னில் திரும்பினார். லபுசேன் 48 ரன்னில் அவுட்டானார். பவுண்டரி (15) மழை பொழிந்த ஹெட், அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 34.1 ஓவரில் 166/2 எடுத்து, 218 ரன் பின்தங்கி இருந்தது.
ஹெட் (91 ரன், 87 பந்து), நேசர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாவது இடம்
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில் 3வது இடத்திலுள்ள பாண்டிங்கை (ஆஸி.,) சமன் செய்தார் ஜோ ரூட். இருவரும் தலா 41 சதம் அடித்துள்ளனர். முதல் இரு இடத்தில் இந்தியாவின் சச்சின் (51), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45) உள்ளனர். இலங்கையின் சங்ககரா (38) 4வது இடத்தில் உள்ளார்.
* டெஸ்டில் அதிக முறை 150 ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் ரூட் (17) 4வது இடம் பிடித்தார். முதல் 3 இடத்தில் சச்சின் (20, இந்தியா), லாரா (19, வெ.இண்டீஸ்), சங்ககரா (19, இலங்கை), பிராட்மேன் (18, ஆஸி.,) உள்ளனர்.
* டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சச்சினுக்கு (200 போட்டி, 15,921 ரன்) அடுத்து ரூட் (163ல் 13,937) உள்ளார். பாண்டிங் (168ல் 13,378, ஆஸி.,) 3வது இடத்தில் உள்ளார்.
528 ரன்
ஆஷஸ் தொடரில் 6 ஆண்டுக்குப் பின் 500 ரன்களை எட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஆனார் ஹெட். நடப்பு தொடரில் இதுவரை 9 இன்னிங்சில் 528 ரன் எடுத்துள்ளார். முன்னதாக 2019ல் ஸ்டீவ் ஸ்மித், 774 ரன் (4 போட்டி) எடுத்திருந்தார்.

