/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் ஆட்ட நாயகன்: சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
/
அஷ்வின் ஆட்ட நாயகன்: சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
அஷ்வின் ஆட்ட நாயகன்: சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
அஷ்வின் ஆட்ட நாயகன்: சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
ADDED : செப் 22, 2024 11:24 PM

சென்னை: சென்னை டெஸ்டில் அசத்திய இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பேட்டிங் (113 ரன்), பவுலிங்கில் (6 விக்.,) மிரட்டிய அஷ்வின், ஆல் ரவுண்டராக ஜொலித்தார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 376, வங்கதேசம் 149 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்த நிலையில், 'டிக்ளேர்' செய்தது. வங்கதேசத்துக்கு 515 ரன் என்ற கடின வெற்றி இலக்கை நிர்ணயித்தது. மூன்றாவது நாள் முடிவில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்திருந்தது.
அஷ்வின் 5 விக்.,: நான்காவது நாள் ஆட்டத்தில் கேப்டன் ஷான்டோ, சாகிப் இணைந்து முதல் ஒரு மணி நேரம் போராடினர். 5வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தனர். இந்த சமயத்தில் 'சுழல் விஞ்ஞானி' அஷ்வின் வந்தார். சாகிப்பை (25) வெளியேற்றி திருப்பம் தந்தார். ஜடேஜா பந்தில் லிட்டன் (1) நடையை கட்டினார். மெஹிதி ஹசனை (8) அவுட்டாக்கிய அஷ்வின், தனது 5வது விக்கெட்டை பெற்றார். ஜடேஜா வலையில் ஷான்டோ (82) சிக்கினார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. சுலபமாக வென்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்தியா சார்பில் அஷ்வின் 6, ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அஷ்வின் வென்றார். இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் வரும் செப். 27ல் துவங்குகிறது.
37வது 5 விக்.,
டெஸ்ட் அரங்கில் 37வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார் அஷ்வின். அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (37) உடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (67 முறை) உள்ளார்.
முதல் வீரர்ஒரே மைதானத்தில் (சென்னை சேப்பாக்கம்) இரு முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்+ சதம் அடித்த உலகின் முதல் வீரர் என சாதனை படைத்தார் அஷ்வின். இங்கு வங்கதேசம் (6 விக்., 113 ரன், 2024), இங்கிலாந்துக்கு எதிராக (5 விக்கெட், 106 ரன், 2021) சாதித்தார்.
நாலு 'ஸ்பெஷல்'
* அஷ்வின் ஒரே டெஸ்டில் சதம், 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்துவது நான்காவது முறை (வெ.இண்டீசுக்கு எதிராக 2, இங்கிலாந்து, வங்கத்துடன் தலா ஒரு முறை). இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் போத்தம் (5 முறை) உள்ளார்.
* நான்காவது இன்னிங்சில் 7வது முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார் அஷ்வின். இப்பட்டியலில் முரளிதரன், வார்ன் உடன் இரண்டாவது இடத்தை (7) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் இலங்கையின் ஹெராத் (12 முறை) உள்ளார். ***
* நான்காவது இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரரானார் அஷ்வின் (99 விக்., 35 இன்னிங்ஸ்). அடுத்த இடத்தில் கும்ளே (94 விக்., 35 இன்னிங்ஸ்) உள்ளார்.
'சீனியர்' வீரர்
ஆண்கள் டெஸ்ட் அரங்கில் ஒரு போட்டியில் சதம் + 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய சீனியர் வீரரானார் அஷ்வின் (38 ஆண்டு, 2 நாள்). முன்னதாக இந்தியாவின் பாலி உம்ரிகர் (36 ஆண்டு, 7 நாள், 172 ரன்+ 5 விக்., எதிர் வெ.இண்டீஸ், போர்ட் ஆப் ஸ்பெயின், 1962) சாதித்து இருந்தார்.
வெற்றி அதிகம்
சென்னை போட்டியில் அசத்திய பின், தனது 92 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக அதிக வெற்றியை பதிவு செய்தது. 580 டெஸ்டில் 179 வெற்றி, ஒரு 'டை', 178 தோல்வி, 222 போட்டிகளை 'டிரா' செய்துள்ளது.
எட்டாவது இடம்
டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் வால்ஷை முந்தி, 8வது இடம் பிடித்தார் அஷ்வின். முதல் நான்கு இடங்களில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (704), இந்தியாவின் கும்ளே (619) உள்ளனர்.
750 விக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட் (282 போட்டி) என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய பவுலரானார் அஷ்வின். 101 டெஸ்டில் 522, 116 ஒருநாள் போட்டியில் 156, 65 'டி-20' போட்டியில் 72 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முதலிடத்தில் கும்ளே (953 விக்.,) உள்ளார்.
முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அஷ்வின் (11 முறை, 36 போட்டி). இவர் ஆஸ்திரேலியாவின் லியானை (10 முறை, 43 போட்டி) முந்தினார்.
'பொங்கல் டெஸ்ட்'
தமிழகத்தின் அஷ்வினுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் ராசியானது. இங்கு 5 டெஸ்டில் 2 சதம், 1 அரைசதம் உட்பட 342 ரன் (சராசரி 48.85), 36 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அஷ்வின் கூறுகையில்,''சென்னையில், ஒவ்வொரு முறை விளையாடும் போதும் அற்புதமான உணர்வு ஏற்படும். இளம் பருவத்தில் இங்குள்ள 'கேலரி'யில் அமர்ந்து பல சர்வதேச போட்டிகளை பார்த்துள்ளேன். இப்போது அதே மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது சிறப்பானது. எனது வாழ்க்கைக்கு கைகொடுப்பது பவுலிங் தான். பவுலிங்கிற்கே முதல் மரியாதை கொடுக்கிறேன் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
இந்திய ஆடுகளங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. கோல்கட்டா ஈடன் கார்டன், தர்மசாலாவுக்கு வேறுபாடு உண்டு. வானிலை, ஆடுகளத்தின் தன்மையில் மாறுதலை உணரலாம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தான் எப்போதும் 'பாக்சிங் டே டெஸ்ட்' நடக்கிறது. இது போல 'பொங்கல் டெஸ்ட்' என சென்னையில் மட்டும் போட்டிகள் நடப்பதில்லை,''என்றார்.
'நம்பர்-1'
ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2024-2025) புள்ளிப்பட்டியலில் இந்திய அணி (71.67 வெற்றி சதவீதம்) முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா (62.50%), நியூசிலாந்து (50.00%) அணிகள் உள்ளன. வங்கதேச அணி (39.29%) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.