/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் '500' * டெஸ்ட் அரங்கில் அபாரம்
/
அஷ்வின் '500' * டெஸ்ட் அரங்கில் அபாரம்
ADDED : பிப் 16, 2024 04:10 PM

ராஜ்கோட்: டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்தார் அஷ்வின். இம்மைல்கல்லை கடந்த இரண்டாவது இந்தியர் ஆனார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.
'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 326 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (110), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரன் குவிப்பு
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. ஆண்டர்சன் 'வேகத்தில்' குல்தீப் (4) அவுட்டானார். மறுபக்கம் ஜோ ரூட் சுழலில் ஜடேஜா, 112 ரன்னுக்கு அவுட்டானார். அஷ்வின், துருவ் ஜோரல் இணைந்து போராடினர். அஷ்வின் 37 ரன் எடுத்தார். துருவ் ஜோரல் 46 ரன் எடுத்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
'டெயிலெண்டர்' பும்ரா 28 பந்தில் 26 ரன் எடுத்து கைகொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 4, ரேஹன் அகமது 2 விக்கெட் சாய்த்தனர்.
அஷ்வின் அபாரம்
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் 14வது ஓவரை வீசினார் அஷ்வின். இதன் முதல் பந்தை ஜாக் கிராலே அடித்தார். இதை ரஜத் படிதர் 'கேட்ச்' செய்ய, டெஸ்ட் அரங்கில் அஷ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
* கும்ளேவுக்கு (619 விக்.,) அடுத்து இந்த இலக்கை அடைந்த இரண்டாவது இந்திய பவுலர் ஆனார் அஷ்வின்.
* இலங்கையின் முரளிதரனுக்கு அடுத்து (87 டெஸ்ட்) குறைந்த டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டிய பவுலர் ஆனார் அஷ்வின் (98 டெஸ்ட்).
* முரளிதரன், லியானுக்கு (ஆஸி.,) பின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது 'ஆப் ஸ்பின்னர்' என பெருமை பெற்றார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்திருந்தது. டக்கெட் சதம் விளாசினார்.