/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் 'ஸ்பெஷல்' ஆயுதம்: கவாஸ்கர் ஆருடம்
/
அஷ்வின் 'ஸ்பெஷல்' ஆயுதம்: கவாஸ்கர் ஆருடம்
ADDED : செப் 01, 2024 11:45 PM

மும்பை: ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும். ஸ்டீவ் ஸ்மித்திற்கு அஷ்வின் 'செக்' வைக்கலாம்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. கடந்த இரு தொடரில் (2018-19, 2020-21) இந்திய அணி வென்றது. இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்து, 'ஹாட்ரிக்' கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
மனரீதியில் சவால்: உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலியா 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை கடந்த 10 ஆண்டுகளாக தொட முடியவில்லை. இந்த குறையை போக்க, கம்மின்ஸ் தலைமையிலான அணி முயற்சிக்கலாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலங்களான மெக்ராத், பாண்டிங், ஜெப் லாசன், புக்கானன் உள்ளிட்டோர் 'மைண்ட் கேமை' துவக்கிவிட்டனர். தங்களது அணியே டெஸ்ட் தொடரை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால், சிறந்த டெஸ்ட் போட்டியை காணலாம். எனது கணிப்பின்படி இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றும். வார்னர் ஓய்வால், துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பிரச்னை உள்ளது. 'மிடில்-ஆர்டரும்' வலுவாக இல்லை.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் (வங்கதேசத்துடன் 2, நியூசிலாந்துடன் 3) பங்கேற்பது நல்ல விஷயம். மனரீதியான மோதலை ஆஸ்திரேலிய பிரபலங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டனர். இதற்கு நமது தரப்பில் ரவி சாஸ்திரியை தவிர மற்றவர்கள் பதிலடி தராதது கவலை அளிக்கிறது.
ஸ்மித்துக்கு நெருக்கடி: ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித், பும்ரா 'வேகத்தில்' முதலில் தப்ப வேண்டும். இவரை வீழ்த்த 'ஸ்பெஷல்' வகை பந்துவீச்சை கண்டு பிடித்திருப்பதாக அஷ்வின் பீதியை கிளப்ப வேண்டும். அந்த மந்திர பந்தின் ரகசியங்களை எங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளலாம். டெஸ்ட் அரங்கில் அஷ்வின் 'சுழலில்' 8 முறை ஸ்மித் அவுட்டாகியிருப்பதால், நெருக்கடி அதிகரிக்கும். ஆஸ்திரேலியா பாணியில், நம்மவர்களும் மனரீதியில் பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.