/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரையிறுதியில் இந்திய அணி * ஆசிய கோப்பை தொடரில் அசத்தல்
/
அரையிறுதியில் இந்திய அணி * ஆசிய கோப்பை தொடரில் அசத்தல்
அரையிறுதியில் இந்திய அணி * ஆசிய கோப்பை தொடரில் அசத்தல்
அரையிறுதியில் இந்திய அணி * ஆசிய கோப்பை தொடரில் அசத்தல்
ADDED : ஜூலை 23, 2024 11:21 PM

தம்புலா: ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் 82 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன் விளாசினார்.
இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டிங் தேர்வு செய்தார்.
சபாஷ் ஷபாலி
இந்திய அணிக்கு இம்முறை ஷபாலி வர்மா, ஹேமலதா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. கபிதா வீசிய முதல் ஓவரில் ஷபாலி, 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஷப்னம் ஓவரிலும் பவுண்டரிகள் விளாசினார். மறுபக்கம் ஹேமலதா தன் பங்கிற்கு பவுண்டரிகள் அடிக்க, இந்திய அணி 6 ஓவரில் 50/0 ரன் எடுத்தது. ருபினா வீசிய 7வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் ஷபாலி. இவர் 26வது பந்தில் அரைசதம் எட்டினார்.
கபிதா பந்தை சிக்சருக்கு விரட்டிய ஹேமலதா, இந்து, சீதா பந்துகளிலும் பவுண்டரி அடித்தார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 122 ரன் சேர்த்த போது, ஹேமலதா (47) அவுட்டானார்.
தனது விளாசலை நிறுத்தாத ஷபாலி, இந்து வீசிய 15வது ஓவரில் முதல் இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இவர் 48 பந்தில் 81 ரன் எடுத்த போது, ஸ்ரேஸ்தா பந்தில் அவுட்டானார்.
சஜனா 10 ரன் மட்டும் எடுத்தார். கடைசி நேரத்தில் ஜெமிமா பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 178 ரன் குவித்தது. ஜெமிமா (28), ரிச்சா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
எளிய வெற்றி
நேபாள அணிக்கு சம்ஜனா (7), சீதா ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கபிதா (6), ரேணுகா 'வேகத்தில்' வெளியேறினார். கேப்டன் இந்து (14), ருபினா (15) நீடிக்கவில்லை.
மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, நேபாள அணி 20 ஓவரில் 96/9 ரன் மட்டும் எடுத்தது. இந்திய அணி 82 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்ற இந்தியா, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
எமிரேட்சை வென்றது பாக்.,
'ஏ' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 103/8 ரன் எடுத்தது. பாகிஸ்தான் அணி 14.1 ஓவரில் 107/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் 2ல் வென்ற பாகிஸ்தான், 4 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. 3 போட்டியிலும் தோற்ற எமிரேட்ஸ் வெளியேறியது.