ADDED : செப் 18, 2026 10:33 PM

நிஷின்: ஆசிய விளையாட்டு கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. காலிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வென்றது.
ஜப்பானில், ஆசிய விளையாட்டு நடக்கிறது. பெண்கள் கிரிக்கெட் ('டி-20') காலிறுதியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஜப்பான் அணிக்கு அயகா கடோ-ஸ்டாபோர்டு (25), ஹருனா இவாசாகி (10) ஆறுதல் தந்தனர். கேப்டன் மை யனாகிடா (0), எரிகா ஓடா (5) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, ஜப்பான் அணி 19.5 ஓவரில் 57 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4, ஷபாலி வர்மா 2, ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி (0), பாரதி புல்மாலி (6) ஏமாற்றினர். ஷிமாகோ கடோ வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஷபாலி வர்மா வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 5 ஓவரில் 59/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி (40 ரன், 15 பந்து, 2X6, 6X4), ரிச்சா கோஷ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
மற்றொரு காலிறுதியில் இலங்கை அணி (160/4, 20 ஓவர்) 86 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை (74/7, 20 ஓவர்) வென்றது.
அரையிறுதியில் (செப். 20) இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
