தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா மீண்டும் தங்கம்: பாக்., அணியை வீழ்த்தியது

இந்தியா மீண்டும் தங்கம்: பாக்., அணியை வீழ்த்தியது

இந்தியா மீண்டும் தங்கம்: பாக்., அணியை வீழ்த்தியது


ADDED : அக் 03, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிஸ்ஸின்: ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது (2023, 2026) முறையாக தங்கம் வென்றது. பைனலில் பாகிஸ்தானை 19 ரன்னில் வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங் தேர்வு செய்தார்.

அபிஷேக் அபாரம்

இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் தந்தது. ஷாத் மசூத் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்த வைபவ் (15), சயிம் அயுப் 'சுழலில்' சிக்கினார். சயிம் ஓவரில் 6, 4, 4 என தொடர்ந்து விளாசினார் அபிஷேக். சஞ்சு சாம்சன் (2) அவுட்டான போதும், சிக்சர் மழை பொழிந்த அபிஷேக், 20 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 28 பந்தில் 61 ரன் (7X6, 3X4) எடுத்து அவுட்டானார்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 120/3 ரன் எடுத்திருந்தது. பின் ரன்வேகம் குறைந்தது. ஷ்ரேயஸ் ஐயர் (21), இஷான் கிஷான் (20) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் திலக் வர்மா, ஷிவம் துபே (27) இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவரில் 211/6 குவித்தது. அரைசதம் அடித்த திலக் வர்மா (51), அக்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹசன் 'டென்ஷன்'

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பர்ஹான் (10), சடாஹத் (23) ஜோடி துவக்கம் தந்தது. உஸ்மான் கான் (3) ஏமாற்ற, 7 ஓவரில் 42/3 என திணறியது. பின் இணைந்த ஹசன் நவாஸ், சயிம் அயுப் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 4 ரன்னில் வைபவ் தயவில் தப்பிய ஹசன், அரைசதம் அடித்தார். அடுத்த 7 ஓவரில், 84 ரன் எடுத்தனர் (14 ஓவர், 126/3).

பின் வந்த ஷிவம் துபே பந்தில், சயிம் (29) அவுட்டானார். கடைசி 18 பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 52 ரன் தேவைப்பட்டன. பந்தை சுழற்றிய வாஷிங்டன் சுந்தர் (18 வது ஓவர்), 8 ரன் மட்டும் விட்டுத்தர, திருப்பம் ஏற்பட்டது. கடைசி பந்தில் ஹசன் (96 ரன், 51 பந்து) அவுட்டாக, பாகிஸ்தான் 20 ஓவரில் 192/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

வரலாறு படைத்த வைபவ்

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இளம் இந்தியர் என வரலாறு படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது, 6 மாதம், 6 நாள்). இதற்கு முன் 2018ல் சவுரப் சவுத்ரி (16 வயது, 3 மாதம், 9 நாள்) முதலிடத்தில் இருந்தார். ஒட்டு மொத்தமாக இளம் வயதில் பதக்கம் வென்ற இந்தியர் வரிசையில், ஸ்பீடு ஸ்கேட்டிங் வீராங்கனை சஞ்சனாவுக்கு (2023ல் வெண்கலம், 15 வயது, 3 மாதம், 11 நாள்) அடுத்து இரண்டாவது இடம் பெற்றார் வைபவ்.

108 சிக்சர்

சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் இரண்டாவது முறையாக 100க்கும் மேல் சிக்சர் அடித்தார் அபிஷேக் சர்மா. இவர், 2025ல் 108, 2026ல் 104 சிக்சர் அடித்துள்ளார்.

211/6 ரன்

நேற்று 211/6 ரன் எடுத்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 192/5 (2012, ஆமதாபாத்) எடுத்ததே அதிகம்.

1000 ரன்

சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் 1000 ரன் எடுத்த இரண்டாவது இந்தியர் ஆனார் இஷான் கிஷான் (1005 ரன்). இதற்கு முன் 2022ல் சூர்யகுமார் 1164 ரன் எடுத்தார்.

இலங்கை 'வெண்கலம்'

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இலங்கை அணி (165/9), 63 ரன்னில் வங்கதேசத்தை (17.3 ஓவர், 102/10) வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

பத்துக்கு பத்து

இந்தியா, பாகிஸ்தான் ஆண்கள், பெண்கள் அணிகள் கடைசியாக மோதிய 10 சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

கைகுலுக்க மறுப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையில் நல்லுறவு இல்லாததால், இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது இல்லை. இது நேற்றும் தொடர்ந்தது. பைனல் முடிந்ததும் இரு அணி வீரர்களும் 'டிரசிங் ரூம்' நோக்கிச் சென்றனர்.

* பாகிஸ்தான் அணிக்கான வெள்ளிப்பதக்கத்தை, ஆசிய விளையாட்டு ஒருங்கிணைப்பு குழு அதிகாரி வழங்கினார். இந்திய கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர், தற்போதைய ஐ.சி.சி., தலைவர், ஜெய் ஷா, இந்திய வீரர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார்.

வம்பிழுத்த வீரர்

நேற்று சயிம் அயுப் பந்தில், 15 வயது வைபவ் அவுட்டானார். உடனே குழந்தையை கையில் வைத்து தாலாட்டுவது போல சைகை செய்து, வைபவை கேலி செய்தார் அயுப். இதன் பின் இவரது பந்துகளை இந்திய வீரர்கள் மாறி மாறி விளாசினர். 4 ஓவரில் 47/1 ரன் கொடுத்தார். பீல்டிங்கிலும் சில கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டார்.

இவர் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த போது, இந்திய ரசிகர்கள், 'இன்னொரு 'கேட்ச்சை' நழுவவிடு' என வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி பாராட்டு

ஆசிய விளையாட்டில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட செய்தி:

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக கொண்ட இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். ஏற்கனவே பெண்கள் அணியும் சாதித்து இருந்தது.

தவிர, முதன் முறையாக நமது இந்திய ஆண்கள், பெண்கள் ஹாக்கி அணிகள் ஒரே ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது, கூடுதல் சிறப்பு. ஆசிய அரங்கில் இந்திய ஹாக்கியின் வளர்ச்சியை, இது காட்டுகிறது.

வில்வித்தை ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்ற கும்கும்மிற்கு வாழ்த்துகள். கடைசியில் 'ஷூட் ஆப்' முறையில் சிறப்பாக செயல்பட்டு வென்ற தங்கம், என்றும் நினைவில் நிற்கும். தனிநபர் கோல்ப் போட்டியில் தங்கம் வென்ற பிரனவி, மல்யுத்தத்தில் அசத்திய அமன் ஷெராவத்திற்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜனாதிபதி வாழ்த்து

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில், 'ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். பெண்கள் அணியும் தங்கம் வென்றதால் இது மிகவும் ஸ்பெஷலானது. ஒவ்வொரு இந்தியரின் இதயமும், மகிழ்ச்சி, பெருமையால் நிறைந்துள்ளது,' என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us