/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கபிலை சுட்டுக் கொல்ல முயற்சி: யுவராஜ் சிங் தந்தை திட்டம்
/
கபிலை சுட்டுக் கொல்ல முயற்சி: யுவராஜ் சிங் தந்தை திட்டம்
கபிலை சுட்டுக் கொல்ல முயற்சி: யுவராஜ் சிங் தந்தை திட்டம்
கபிலை சுட்டுக் கொல்ல முயற்சி: யுவராஜ் சிங் தந்தை திட்டம்
ADDED : ஜன 12, 2025 11:14 PM

புதுடில்லி: ''இந்திய அணிக்கு என்னை தேர்வு செய்யாததால், கபில்தேவை சுட்டுக் கொல்ல திட்டமிட்டேன்,'' என, யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் 66. ஒரு டெஸ்ட் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் ஹரியானா, பஞ்சாப் அணிகளுக்காக பங்கேற்றார். கபில் தேவ் கேப்டன் ஆன பின், யோக்ராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த யோக்ராஜ், 1983ல் இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்று தந்த கபிலை சுட திட்டமிட்டாராம்.
இதுகுறித்து யோக்ராஜ் கூறியது: இந்தியா, வடக்கு மண்டலம், ஹரியானா அணிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற கபில் தேவ், எவ்வித காரணமின்றி என்னை அணியில் இருந்து நீக்கினார். எனது மனைவி சப்னம் கவுர், இதுகுறித்து கபில்தேவிடம் கேளுங்கள் என்றார். எனது துப்பாக்கியுடன் கபில்தேவ் வீட்டிற்கு சென்றேன். அவர், தனது தாயாருடன் வெளியே வந்தார். அப்போது அவரை திட்டினேன். பின் அவரிடம் 'எனது துப்பாக்கியால் உனது தலையில் சுடுவதேற்கு இங்கு வந்தேன். இதை செய்ய மாட்டேன். ஏனெனில் உங்களுக்கு மிகவும் பக்தியுள்ள அம்மா இருக்கிறார்கள்,' என்று கூறிவிட்டு எனது மனைவியுடன் வீடு திரும்பினேன். அத்தருணத்தில் தான் இனி கிரிக்கெட் விளையாடக் கூடாது என முடிவு செய்தேன். எனது மகன் யுவராஜ் சிங்கை களமிறக்க தீர்மானித்தேன்.
கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்ற போது இந்தியாவில் ஒருவர் மட்டும் அழுதிருப்பார். அவர் தான் கபில் தேவ். உங்களை விட எனது மகன் சிறப்பாக விளையாடினார் என்று கபிலுக்கு செய்தி அனுப்பினேன். அதற்கு கபில் தேவ், மன்னிப்பு கேட்டிருந்தார்.
அணித்தேர்வில் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடியும் எனக்கு துரோகம் செய்துவிட்டார். தேர்வுக்குழுவில் இருந்த இவர், நான் கவாஸ்கரின் ஆதரவாளர் என கருதி, அணியில் இடம் கொடுக்கவில்லை.
இவ்வாறு யோக்ராஜ் கூறினார்.

