sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி

/

ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி


UPDATED : ஜூன் 23, 2024 11:39 PM

ADDED : ஜூன் 23, 2024 11:23 PM

Google News

UPDATED : ஜூன் 23, 2024 11:39 PM ADDED : ஜூன் 23, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிங்ஸ்டன்: 'டி-20' உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. 'சூப்பர்-8' போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

'டி-20' உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. 'சூப்பர்-8' சுற்று போட்டியில் (பிரிவு-1) ஆஸ்திரேலியா (ரேங்கிங்கில் 2வது இடம்), ஆப்கானிஸ்தான் (10வது இடம்) மோதின.

வலுவான துவக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜத்ரன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதை உணர்ந்து 'கூலாக' ஆடினர். அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினர். இவர்களை ஆஸ்திரேலிய பவுலர்களால் அசைக்க முடியவில்லை. 15 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 109/0 ரன் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்த நிலையில், ஸ்டாய்னிஸ் பந்தில் குர்பாஸ் (60) வெளியேறினார். ஜாம்பா 'சுழலில்' ஜத்ரன் (51) சிக்கினார்.

இதற்கு பின் ஆஸ்திரேலிய பவுலர்கள் பிடியை இறுக்கினர். பாட் கம்மின்ஸ் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்த, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3, ஜாம்பா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சுலப இலக்கை எட்டிவிடலாம் என்று எண்ணிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்கன் பவுலர்கள் 'செக்' வைத்தனர். 'டாப்-ஆர்டரை' நவீன்-உல்-ஹக் தகர்த்தார். இவரது முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் (0) போல்டானார். அடுத்த ஓவரில் கேப்டன் மிட்சல் மார்ஷ் (12) நடையை கட்டினார். நபி வலையில் வார்னர் (3) சிக்க, 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 33 ரன் எடுத்து தவித்தது.

குல்பதின் மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் 'மிடில் ஆர்டரை' நொறுக்கினார் குல்பதின் நைப். இவரது 'வேகத்தில்' ஸ்டாய்னிஸ் (11), டிம் டேவிட் (2) அவுட்டாகினர். தனிநபராக போராடிய மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார். குல்பதின் பந்தில் மேக்ஸ்வெல் (59) வெளியேற, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. வேட் (5), கம்மின்ஸ்(3) உள்ளிட்ட 'டெயிலெண்டர்கள்' கைகொடுக்க தவற, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 127 ரன்னுக்கு சுருண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது.ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் 4, நவீன் உல்-ஹக் 3 விக்கெட் வீழ்த்தினர்.

'

பீல்டிங்' மோசம்

ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு மோசமான 'பீல்டிங்' முக்கிய காரணம். ஏகார், டிம் டேவிட், வார்னர் கைநழுவ, மொத்தம் 5 கேட்ச், 4 ரன் அவுட் வீணாகின. குர்பாசை 'ஸ்டம்பிங்' செய்யும் வாய்ப்பை கீப்பர் வேட் கோட்டைவிட்டார்.



கம்மின்ஸ் மீண்டும் 'ஹாட்ரிக்'

வங்கதேசத்திற்கு எதிராக 'ஹாட்ரிக்' சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நேற்றும் அசத்தினார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ரஷிக் கானை (2) அவுட்டாக்கினார். பின் 20வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் ஜனத் (13), குல்பதினை (0) வெளியேற்றினார். 3வது பந்தை கரோட்டி துாக்கி அடித்தார். இதை வார்னர் பிடிக்க தவறியதால், 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு நழுவியது. இருப்பினும் தொடர்ந்து 3 விக்கெட் வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். 'டி-20' உலக கோப்பை அரங்கில் இரண்டு 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் கம்மின்ஸ். ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால், இவரது சாதனை வீணானது.

முதல் முறை

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தனது முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் பெற்றது. இவ்விரு அணிகளும் 6 முறை (2 'டி-20', 4 ஒருநாள் போட்டி) மோதியுள்ளன.

குல்பதின் பெருமிதம்

ஆப்கன் வெற்றி நாயகன் குல்பதின் கூறுகையில்,''ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பெரிய சாதனை. இதற்காக நீண்ட காலம் காத்திருந்தோம். எங்கள் தேசத்திற்கு பெருமையான தருணம்,'' என்றார்.

துாங்க முடியல...

மும்பையில் 2023, நவ. 7ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 291/5 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 91 ரன் எடுத்து தவித்தது. இந்த சமயத்தில் மேக்ஸ்வெல் கைகொடுத்தார். இவர், 201 ரன்* (21 பவுண்டரி, 10 சிக்சர்) விளாச, ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 293/7 ரன் எடுத்து வென்றது. நேற்று மேக்ஸ்வெல் அரைசதம் கடந்த போதும், அணியை கரை சேர்க்க முடியவில்லை.

இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷிக் கான் கூறுகையில்,''மும்பையில் தோல்வி அடைந்த சோகத்தில், அன்று இரவு முழுவதும் துாங்கவில்லை. தற்போது மகிழ்ச்சியால் துாக்கம் வரவில்லை. 2021ல் 'டி-20' உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவை வென்றது பெரிய சாதனை. போர் பூமியான ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உற்சாகம் தருவது கிரிக்கெட் மட்டுமே. இவர்கள் கொண்டாடி மகிழ, ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது திருப்தி அளிக்கிறது,'' என்றார்.

பிராவோ காரணம்

ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ உள்ளார். இவரது ஆலோசனைப்படி குல்பதின் 'ஸ்லோ' பந்துகளை வீசினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸ்திரேலியாவை வென்ற ஆப்கானிஸ்தான் அணியினர் பிராவோவின் 'சாம்பியன்' பாடலுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us