ADDED : நவ 13, 2025 09:59 PM

சைல்ஹெட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், வங்கதேச அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சைல்ஹெட் நகரில் நடக்கிறது. அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 338/1 ரன் எடுத்திருந்தது. ஹசன் ஜாய் (169), மோமினுல் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது விக்கெட்டுக்கு 172 ரன் சேர்த்த போது முகமதுல் ஹசன் ஜாய் (171) அவுட்டானார். மெக்கர்த்தி பந்தில் மோமினுல் ஹக் (82) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (100) சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லிட்டன் தாஸ் (60) அரைசதம் கடந்தார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 587/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் (43) ஆறுதல் தந்தார். ஹாரி டெக்டர் (18), கர்டிஸ் கேம்பர் (5), லார்கன் டக்கர் (9) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 86/5 ரன் எடுத்து 215 ரன் பின்தங்கி இருந்தது.இன்று வங்கதேச பவுலர்கள் அசத்தினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.

