/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது வங்கதேசம்: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
/
கோப்பை வென்றது வங்கதேசம்: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
ADDED : டிச 20, 2024 10:22 PM

கிங்ஸ்டவுன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, தொடரை 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற வங்கதேசம், ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி கிங்ஸ்டவுனில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு ஜாகர் அலி (72*), பர்வேஸ் ஹொசைன் எமான் (39), மெஹிதி ஹசன் மிராஸ் (29) கைகொடுத்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (0), ஜஸ்டின் கிரீவ்ஸ் (6), ராஸ்டன் சேஸ் (0), கேப்டன் ராவ்மன் பாவெல் (2) ஏமாற்றினர். ஷெப்பர்ட் (33), ஜான்சன் சார்லஸ் (23) ஆறுதல் தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி16.4 ஓவரில் 109 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
'ரன்-அவுட்' குழப்பம்ராஸ்டன் சேஸ் பந்தை (14.3வது ஓவர்) சந்தித்த வங்கதேசத்தின் ஜாகர் அலி, 2 வது ரன் எடுக்க ஓடினார். ஆனால் சக வீரர் ஷமிம் ஹொசைன் மறுத்தார். இதை கவனிக்காமல் ஜாகர் அலி ஓடிவர, இருவரும் விக்கெட் கீப்பர் பகுதியில் இருந்தனர்.
இதற்குள் பந்தை பெற்ற சேஸ், ரன்னர் பகுதியில் 'அவுட்' செய்தார். இதனால் ஜாகர் அலி அவுட் என நினைத்து 'டிரசிங் ரூம்' திரும்பி விட்டார். 'ரீப்ளே'யில் ஜாகர் அலி முதலில் கீரிசை தொட்ட போது, ஷமிம் 'கிரீசிற்கு' வெளியே நின்றது தெரிந்தது. இதனால் ஜாகர் அலியின் 'அவுட்' திரும்பப் பெறப்பட, ஷமிம் வெளியேறினார்.
விதிப்படி, 'அவுட்' என அறிவிக்கப்பட்ட ஒரு வீரர், பவுண்டரி எல்லையை கடந்து விட்டால் மீண்டும் 'பேட்' செய்ய முடியாது. ஆனால் ஜாகர் அலியை மீண்டும் களமிறங்குமாறு, நான்காவது அம்பயர் தெரிவித்தது வியப்பாக இருந்தது. இவர், அரைசதம் கடந்து வெற்றிக்கு உதவினார்.