ADDED : ஜன 12, 2025 11:04 PM

மும்பை: பி.சி.சி.ஐ.,யின் புதிய செயலராக தேவாஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்யா தேர்வாகினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலராக இருந்த ஜெய் ஷா 36, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய தலைவராக தேர்வானார். இணை செயலர் தேவாஜித் லான் சைகியா, தற்காலிக செயலராக செயல்பட்டு வந்தார்.
மும்பையில் பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய செயலராக அசாமை சேர்ந்த தேவாஜித் சைகியா, பொருளாளராக சத்தீஸ்கரின் பிரப்தேஜ் சிங் பாட்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ''சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புதிய செயலர், பொருளாளர் தேர்வு செய்யப்பட்டதை தவிர வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. பெண்கள் பிரிமியர் லீக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு வரும் ஜன. 18 அல்லது 19ல் இருக்கும்,'' என்றார்.

