/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தானை வென்றது வங்கம்: டெஸ்ட் அரங்கில் வரலாறு
/
பாகிஸ்தானை வென்றது வங்கம்: டெஸ்ட் அரங்கில் வரலாறு
ADDED : ஆக 25, 2024 11:06 PM

ராவல்பிண்டி: டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது வங்கதேசம்.
பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 448, வங்கதேசம் 565 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 23/1 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஷான் மசூது (14), பாபர் ஆசம் (22) சோபிக்கவில்லை. அப்துல்லா ஷபீக் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். சாகிப் அல் ஹசன் பந்தில் சவுத் ஷகீல் (0), நசீம் ஷா (3) அவுட்டாகினர். முகமது ரிஸ்வான் (51) அரைசதம் கடந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 'சுழலில்' டெயிலெண்டர்கள் சிக்கினர்.பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4, சாகிப் அல் ஹசன் 3 விக்கெட் சாய்த்தனர்.
சுலப வெற்றி: பின் 30 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாகிர் ஹசன் (15), ஷாத்மன் இஸ்லாம் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.வங்கதேச அணி 1-0 என முன்னிலை பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் (வங்கதேசம்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
14 முறை மோதல்
டெஸ்ட் அரங்கில் இவ்விரு அணிகள் 14 முறை மோதின. இதில் பாகிஸ்தான் 12, வங்கதேசம் ஒரு போட்டியில் வென்றன. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது. இதுவரை இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் வங்கதேசம் வென்றதில்லை.
10 விக்கெட் வித்தியாசம்
வங்கதேச அணி, டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன், 2022ல் மவுன்ட் மவுன்கனுயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
* பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.