/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பாக்சிங் டே' டெஸ்ட்: அசத்துமா ஆஸ்திரேலியா
/
'பாக்சிங் டே' டெஸ்ட்: அசத்துமா ஆஸ்திரேலியா
ADDED : டிச 25, 2025 09:22 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்னில் டிச. 26ல் துவங்குகிறது. இதில் எழுச்சி கண்டால் இங்கிலாந்து அணி முதல் வெற்றி பெறலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா, 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது டெஸ்ட் ('பாக்சிங் டே') மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிச. 26ல் துவங்குகிறது.
ஸ்மித் கேப்டன்: பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (379 ரன்), அலெக்ஸ் கேரி (267) நம்பிக்கை தருகின்றனர். மார்னஸ் லபுசேன் (160) எழுச்சி கண்டால் நல்லது. 'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். 'வேகத்தில்' மிட்சல் ஸ்டார்க் (22 விக்கெட்), ஸ்காட் போலந்து (11) பலம் சேர்க்கின்றனர். தொடையின் பின்பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்த 'சுழல்' வீரர் நாதன் லியான், இத்தொடரில் இருந்து விலகினார். இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.
ஆர்ச்சர் விலகல்: இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் ஜோ ரூட் (219 ரன்), ஜாக் கிராலே (214), ஹாரி புரூக் (173) ஆறுதல் தருகின்றனர். கேப்டன் ஸ்டோக்ஸ் (165) எழுச்சி காண வேண்டும். 'வேகத்தில்' ஜோப்ரா ஆர்ச்சர் விலகியது பின்னடைவு. பிரைடன் கார்ஸ் (14 விக்கெட்) ஓரளவு கைகொடுக்கிறார். ஆஸ்திரேலியாவை சமாளித்து இங்கிலாந்து வீரர்கள் எழுச்சி கண்டால், இம்முறை முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.
'பாக்சிங் டே'
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் (டிச. 25) கிறிஸ்துவ தேவாலயங்களில் 'பாக்ஸ்' (பெட்டி) ஒன்று வைக்கப்படும். இங்கு வருபவர்கள் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை இந்த பெட்டியில் நன்கொடையாக அளித்துச் செல்வர். இந்த 'பாக்சை' கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள், இன்று (டிச. 26) திறப்பர். பணம், பரிசுப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்குவர். இந்த தினத்திற்கு 'பாக்சிங் டே' என்று பெயர்.
டிச. 26ல் விடுமுறை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மெல்போர்னில் டெஸ்ட் போட்டி துவங்கும். இதற்கு 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று பெயர். கடந்த 1950 முதன் முறையாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 1980ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த டெஸ்ட் நடக்கிறது.
பனேசர் விருப்பம்
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததற்கு, தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தின் 'பாஸ்பால்' ஆட்ட அணுகுமுறை காரணமாக கூறப்படுகிறது. இவரை, பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம் குறித்து நன்று அறிந்தவர் தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும். இப்பதவிக்கு இந்தியாவின் ரவி சாஸ்திரி பொருத்தமானவராக இருப்பார்,'' என்றார்.

