/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாதிப்பரா இந்திய வேகங்கள் * உலக கோப்பை தேர்வில் சர்ச்சை
/
சாதிப்பரா இந்திய வேகங்கள் * உலக கோப்பை தேர்வில் சர்ச்சை
சாதிப்பரா இந்திய வேகங்கள் * உலக கோப்பை தேர்வில் சர்ச்சை
சாதிப்பரா இந்திய வேகங்கள் * உலக கோப்பை தேர்வில் சர்ச்சை
ADDED : மே 02, 2024 12:11 AM

புதுடில்லி: உலக கோப்பை இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஜூன் 2-29ல் நடக்க உள்ளது. இதற்கான இந்திய உத்தேச அணியில் பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்க ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், சகால் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு தான் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஐ.பி.எல்., தொடர் துவங்கும் முன் பும்ரா மட்டும் உறுதியாக இடம் பெறுவார், மற்றவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதற்கேற்ப ஐ.பி.எல்., தொடரின் கடைசி கட்ட ஓவர்களில் தமிழகத்தின் நடராஜன் (7 போட்டி, 13 விக்.,), சந்தீப் சர்மா (4ல் 8), அவேஷ் கான் (9ல் 9) சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை சேர்க்காமல், சிராஜ், அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் புதிய பந்தில் நன்றாக 'ஸ்விங்' செய்வர். ஆனால் 'டி-20' போட்டிகளில் கடைசி நேரத்தில் விளாசும் பேட்டர்களை எப்படி கையாள்வது என தெரிந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில் நடப்பு தொடரில் சிராஜ் (6 விக்., சராசரி 9.50 ரன்), அர்ஷ்தீப் (12 விக்., 9.63) என இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர்.
ஆனால் சர்வதேச செயல்பாடு அடிப்படையில் சிராஜ் (10 ல் 12 விக்.,), அர்ஷ்தீப்பை (44ல் 62) தேர்வு செய்துள்ளனர். தவிர இடதுடகை வேகப்பந்து வீச்சாளர் என்பது அர்ஷ்தீப்பை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. இருப்பினும் 'பார்ம்' இல்லாமல் தடுமாறும் இரு வேகப்பந்துவீச்சாளர்களும், உலககோப்பை தொடரில் 'வேகம்' எடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வியப்பு தருகிறது
ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் பின்ச் கூறுகையில்,''இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு வியப்பு தருகிறது. 2 சுழல் போதுமானது. கூடுதலாக ஒரு 'வேகம்', தவிர ரிங்கு சிங்கை சேர்த்திருக்க வேண்டும். ஏனெனில் 'பவர் பிளே' ஓவரில் பும்ராவுடன் சேர்ந்து சிராஜ் அல்லது அர்ஷ்தீப் சிறப்பாக செயல்படுவரா எனத் தெரியவில்லை,'' என்றார்.
ஸ்மித்துக்கு இடமில்லை
'டி-20' உலக கோப்பை ஆஸ்திரேலிய அணியில் முதன் முறையாக முன்னாள் கேப்டன் ஸ்மித் 34, சேர்க்கப்படவில்லை. அணி விபரம்: மிட்சல் மார்ஷ் (கேப்டன்), ஏகார், கம்மின்ஸ், டிம் டேவிட், எல்லிஸ், கிரீன், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், வேட், வார்னர், ஜாம்பா.