/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வீரர்கள் குடும்பத்தினருக்கு 'நோ' * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...
/
வீரர்கள் குடும்பத்தினருக்கு 'நோ' * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...
வீரர்கள் குடும்பத்தினருக்கு 'நோ' * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...
வீரர்கள் குடும்பத்தினருக்கு 'நோ' * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்...
ADDED : பிப் 13, 2025 10:54 PM

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன், குடும்பத்தினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், பாகிஸ்தான், துபாயில், பிப். 19-மார்ச் 9ல் நடக்கவுள்ளது. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பிப். 20ல் வங்கதேசத்தை சந்திக்கிறது.
அடுத்து பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் மோத உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது.
புதிய விதிகள்
இதனிடையே ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் படி, சர்வதேச போட்டி இல்லாத நிலையில் ரோகித், கோலி, சூர்யகுமார் உள்ளிட்டோர் உள்ளூர் போட்டியில் பங்கேற்றனர். பயிற்சி, போட்டி நடக்கும் இடங்களுக்கு வீரர்கள் ஒன்றாக பஸ்சில் சென்றனர்.
வீரர்களின் மானேஜர், ஏஜென்ட், சமையலர் உள்ளிட்டோர், சமீபத்திய இங்கிலாந்து தொடரில் வீரர்கள் தங்கும் இடத்தில் இல்லாமல், வேறு ஓட்டலில் தங்கினர். இந்த வரிசையில், வெளிநாட்டு தொடர் 45 நாளுக்கு மேல் இருந்தால், மனைவி, குழந்தைகள் (18 வயதுக்குட்பட்ட) 14 நாளுக்கு அனுமதிக்கப்படுவர்.
சிக்கலில் வீரர்கள்
தற்போது, பைனல் நடக்கும் தினம் (மார்ச் 9) உட்பட சாம்பியன்ஸ் டிராபி தொடர், மொத்தம் 19 நாள் மட்டும் நடக்க உள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் குடும்பத்தினருடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மட்டும் நாளை துபாய் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறியது:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒரு மாதத்திற்கும் குறைவான நாளில் நடக்க உள்ளது. இதனால் வீரர்கள் தங்களது மனைவி அல்லது தோழிகளுடன் செல்ல வாய்ப்பில்லை. இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவர் இதுகுறித்து விசாரித்தார். அணியின் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஒருவேளை ஏதாவது விதிவிலக்கு தரப்பட்டால், சம்பந்தப்பட்ட வீரர்கள் தான் முழு செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தவிர, சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றால் பயிற்சியாளர், கேப்டன், நிர்வாகத்தின் முன்னதாக அனுமதி பெற வேண்டும். ஏனெனில் கூடுதல் செலவுகளை பி.சி.சி.ஐ., ஏற்காது.
இவ்வாறு அவர் கூறினார்.