/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை அணி அமர்க்கள ஆரம்பம் * ருதுராஜ் தலைமையில் முதல் வெற்றி
/
சென்னை அணி அமர்க்கள ஆரம்பம் * ருதுராஜ் தலைமையில் முதல் வெற்றி
சென்னை அணி அமர்க்கள ஆரம்பம் * ருதுராஜ் தலைமையில் முதல் வெற்றி
சென்னை அணி அமர்க்கள ஆரம்பம் * ருதுராஜ் தலைமையில் முதல் வெற்றி
UPDATED : மார் 23, 2024 12:20 AM
ADDED : மார் 22, 2024 10:50 PM

சென்னை: ஐ.பி.எல்., தொடரை சென்னை அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.
ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நேற்று சென்னையில் துவங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் களமிறங்கினார்.
இரண்டு 'அடி'
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு டுபிளசி, கோலி ஜோடி துவக்கம் கொடுத்தது. பெங்களூரு அணி 4 ஓவரில் 37/0 ரன் எடுத்தது. ஐந்தாவது ஓவரில் முஸ்தபிஜுர் ரஹ்மானை அழைத்தார் ருதுராஜ். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்த டுபிளசி, அடுத்த பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு விளாசினார். இதை ரச்சின் அசத்தலாக 'கேட்ச்' செய்ய டுபிளசி (35) வெளியேறினார். இதே ஓவரின் கடைசி பந்தில் ரஜத் படிதர் (0) தோனியிடம் 'கேட்ச்' கொடுத்து திரும்பினார்.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய மேக்ஸ்வெல், கோலியுடன் இணைந்தார். சகார் வீசிய முதல் பந்தில் மேக்ஸ்வெல் 'டக்' அவுட்டானார். இதன் பின் அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது.
கோலி 'சிக்சர்'
தீக்சனா வீசிய போட்டியின் 10 வது ஓவரின் 2வது பந்தில் இத்தொடரின் முதல் சிக்சர் அடித்தார் கோலி. இந்நிலையில் 12வது ஓவரை வீசிய முஸ்தபிஜுர் மீண்டும் மிரட்டினார். இரண்டாவது பந்தில் கோலியை (21) அவுட்டாக்கிய இவர், நான்காவது பந்தில் கேமரான் கிரீனை (18) போல்டாக்கினார்.
பின் இணைந்த தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 57 பந்தில் 95 ரன் சேர்த்த போது, அனுஜ் ராவத் (48) அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. சென்னை சார்பில் முஸ்தபிஜுர் 4 விக்கெட் சாய்த்தார்.
ரச்சின் அபாரம்
சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் (15), ரச்சின் ரவிந்திரா (37) ஜோடி துவக்கம் கொடுத்தது. ரகானே 27 ரன் எடுக்க, மிட்செல் 22 ரன்னில் திரும்பினார். ஷிவம் துபே, ஜடேஜா இணைந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தி, அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
துபே (34), ஜடேஜா (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதன் முறை
2024 ஐ.பி.எல்., தொடரின் முதல் 'டாஸ்' வென்றார் பெங்களூரு கேப்டன் டுபிளசி.
* முதல் ஓவரை சென்னை பவுலர் சகார் வீசினார்.
* முதல் பந்து 'வைடாக' சென்றது.
* முதல் ரன் எடுத்தார் கோலி.
* சகார் பந்தில் இத்தொடரின் முதல் பவுண்டரி அடித்தார் டுபிளசி.
* டுபிளசி முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.
* முஸ்தபிஜுர் பந்தில் டுபிளசி அடித்த பந்தை ரச்சின் 'கேட்ச்' செய்தார்.
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...
ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நேற்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. முதலில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், தேசியக் கொடியுடன் மைதானத்துக்கு வந்தார். இவருடன் இணைந்து சக நடிகர் டைகர் ஷெராப் நடனம் ஆடினர்.
* அடுத்து பாடகர் சோனு நிகாம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர்.
* டில்லி, இந்தியா 'கேட்' அமைப்பு, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் தரையிறங்கிய நிகழ்வு துல்லியமாக மைதானத்தில் கிராபிக்ஸ் மூலம் காண்பிக்கப்பட்டது. முடிவில் சென்னை அணி புதிய கேப்டன் ருதுராஜ், ஐ.பி.எல்., கோப்பையை அறிமுகம் செய்தார். லேசர் ஷோ, வாணவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.
298 நாளுக்குப் பின்...
சென்னை அணி முன்னாள் கேப்டன் தோனி. கடைசியாக 2023, மே 28ல் நடந்த ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்றார். தற்போது 298 நாளுக்குப் பின் நேற்று மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்றார்.
புதிய 'ரோல்'
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, விக்கெட் கீப்பர்/பேட்டராக களமிறங்கினார்.

