/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி தேர்வில் மோதல்: இரண்டரை மணி நேரம் நடந்தது என்ன
/
இந்திய அணி தேர்வில் மோதல்: இரண்டரை மணி நேரம் நடந்தது என்ன
இந்திய அணி தேர்வில் மோதல்: இரண்டரை மணி நேரம் நடந்தது என்ன
இந்திய அணி தேர்வில் மோதல்: இரண்டரை மணி நேரம் நடந்தது என்ன
ADDED : ஜன 19, 2025 11:41 PM

மும்பை: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணித்தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா கை ஓங்கியது. பயிற்சியாளர் காம்பிர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர், பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன.
தேர்வுக் குழு கூட்டம்: இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பி.சி.சி.ஐ., தலைமை அலுவலகத்தில் நேற்று முன் தினம் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தலைமையில் கூட்டம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு அணி விபரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டரை மணி நேரம் தாமதமாக 3:00 மணிக்கு தான் அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு துணை கேப்டன், விக்கெட் கீப்பர் தொடர்பாக கேப்டன் ரோகித், பயிற்சியாளர் காம்பிர் இடையே நடந்த நீண்ட விவாதமே காரணம்.
பாண்ட்யா புறக்கணிப்பு: துணை கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவை 31, நியமிக்கும்படி வலியுறுத்தினார் காம்பிர். கடந்த 2023ல் 50 ஓவர் உலக கோப்பை, 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்ற அணியின் துணை கேப்டனாக பாண்ட்யா இருந்தார். 'டி-20' அரங்கில் இருந்து ரோகித் ஓய்வு பெற்ற போது, பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலைமை பணிக்கு திடீரென புறக்கணிக்கப்பட்டார். 'டி-20' அணியின் கேப்டனாக சூர்யகுமாரை நியமித்து அதிர்ச்சி தந்தனர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு (2024) துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள 'டி-20' தொடருக்கு அக்சர் படேலை துணை கேப்டனாக நியமித்துள்ளனர்.
சுப்மன் கில் தேர்வு: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் பாண்ட்யாவுக்கு ஆதரவு இல்லை. இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இளம் சுப்மன் கில்லை, 25, துணை கேப்டனாக நியமிக்க வேண்டுமென கேப்டன் ரோகித், அகார்கர் கூறினர். காம்பிர் கோரிக்கையை நிராகரித்தனர். சமீபத்திய செயல்பாட்டின் அடிப்படையில், விக்கெட்கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்யலாம் என்றார் காம்பிர். இதையும் ரோகித் ஏற்கவில்லை. 'ரிஷாப் பன்ட் தான் 'மேட்ச் வின்னர்'; நெருக்கடியை சமாளிப்பதில் வல்லவர்' என்றார்.
ரிஷாப் பன்ட் வாய்ப்பு: கடந்த 2022ல் கார் விபத்திற்கு பின், ரிஷாப் ஒரே ஒருநாள் போட்டியில் (எதிர், இலங்கை, 6 ரன், 2024) தான் பங்கேற்றார். சாம்சனை பொறுத்தவரை 'டி-20' அரங்கில் ஒரே ஆண்டில் (2024) மூன்று சதம் அடித்து சாதனை படைத்தார். 2023ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது வீரராக களமிறங்கி சதம் அடித்தார். இவருக்கு ரோகித் கருணை கிடைக்கவில்லை. இறுதியில் ரோகித்-அகார்கர் விருப்பம் போல துணை கேப்டனாக சுப்மன் கில், கீப்பராக ரிஷாப் பன்ட் தேர்வாக, காம்பிர் நொந்து போனார்.
சர்ச்சையில் சாம்சன்
சஞ்சு சாம்சன் கடந்த 5 சர்வதேச போட்டியில் 3 சதம் விளாசினார். சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'பார்ம்' இல்லாத ராகுல், ரிஷாப் பன்ட் தேர்வாகினர். சஞ்சுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்காததால் ஏற்பட்ட சர்ச்சையே காரணம்.
இது குறித்து கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் கூறுகையில்,''பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என ஒரு வரியில் 'மெசேஜ்' அனுப்பினார் சாம்சன். இதனால் இவரை கேரள அணியில் சேர்க்க முடியவில்லை,''என்றார். இதற்கு எம்.பி., சசி தரூர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாம்சன் தந்தை விஸ்வநாத் கூறுகையில்,''பயிற்சி முகாமில் பங்கேற்காத பல வீரர்கள், விஜய் ஹசாரே தொடரில் விளையாடினர். சஞ்சுவுக்கு மட்டும் வாய்ப்பு மறுத்தனர். இவருக்கு எதிராக கேரள கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சிலர் செயல்படுகின்றனர்,''என்றார்.