தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கொழும்பு டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா

கொழும்பு டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா

கொழும்பு டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா


ADDED : ஆக 22, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் வென்று, தொடரை 2-0 என கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்டில் பங்கேற்கிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், இன்று கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் துவங்குகிறது.

தீருமா ரன் வறட்சி: இந்திய அணிக்கு துவக்கத்தில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் தடுமாறுவது பலவீனம். முதல் டெஸ்டில் இடது கை 'ஆப்-ஸ்பின்னர்' பிரபாத் ஜெயசூர்யா வலையில் இரு முறையும் சுப்மன் (16, 8) சிக்கினார். ஜெய்ஸ்வால் 'வேகங்களை' சமாளிக்க முடியாமல் தவிக்கிறார். காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரன் அவுட்டானார். 2வது இன்னிங்சில் 'வேகப்புயல்' அசித்தா பெர்னாண்டோ 'பவுன்சரில்' டக் அவுட்டானார். இருவர் மீதும் ரசிகர்களின் கண் உள்ளது. ரன் மழை பொழிந்து அசத்த வேண்டும்.

மானவ் சுதார் 'மேஜிக்': தேவ்தத் படிக்கல் (211 ரன்), ராகுல், ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல் நம்பிக்கை தருகின்றனர். வேகப்பந்துவீச்சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மிரட்டுவது பலம். 'சுழலில்' மானவ் சுதார் (10 விக்.,), ரவிந்திர ஜடேஜா 'மேஜிக்' தொடரலாம். மூன்றாவது 'ஸ்பின்னர்' இடத்திற்கு அனுபவ குல்தீப் யாதவ், சரண்ஷ் ஜெயின் போட்டியிடுகின்றனர்.

தினுஷா நம்பிக்கை: இலங்கை அணியை பொறுத்தவரை கேப்டன் தனஞ்சயா டி சில்வாவின் வியூகம் எடுபடவில்லை. கமில் மிஷாரா, சஹான் அராச்சிகே வரவு பலம் சேர்க்கலாம். சோனல் தினுஷா (184 ரன்), டிக்வெல்லா ஓரளவு தாக்குப்பிடிக்கின்றனர். 6வது இடத்தில் வரும் தினுஷாவை முன்னதாக களமிறக்கலாம். முரளிதரன், ஹெராத் ஓய்வுக்கு பின் தரமான 'ஸ்பின்னர்'கள் கிடைக்கவில்லை. பிரபாத் ஜெயசூர்யா (7 விக்.,) மீண்டும் 'சுழலில்' கைகொடுக்கலாம்.

மூன்று ஆண்டு தவம்

இந்திய அணி, கடைசியாக 2023 ஜூலையில் (எதிர், வெஸ்ட் இண்டீஸ்) அன்னிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. பின் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்துடன் 'டிரா' செய்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வெளிநாட்டில் தொடரை வெல்லும் இலக்குடன் கொழும்பு மைதானத்தில் இன்று களமிறங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங் பட்டியலில் இந்தியா, 57.78 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறலாம். தற்போது 53.33 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (77.78), தென் ஆப்ரிக்கா (75.00), நியூசிலாந்து (72.22), வங்கதேசம் (66.67) உள்ளன. இலங்கை (33.33) 6வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் வங்கதேசம் தோற்கும் பட்சத்தில், 55.56 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படும்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 47 டெஸ்டில் மோதின. இந்தியா 23, இலங்கை 7ல் வென்றன. 17 போட்டி 'டிரா' ஆனது.

* கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 9 டெஸ்டில் மோதின. இந்தியா 3, இலங்கை 2ல் வென்றன. 4 போட்டி 'டிரா' ஆனது.

* சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் ஆடுகளம் பேட்டர், பவுலர்களுக்கு கைகொடுக்கும். லேசாக புற்கள் காணப்படுவதால், 'வேகங்கள்' மிரட்டலாம். போகப் போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.* கொழும்பில், போட்டி நடக்கும் 5 நாளும் மழைக்கு வாய்ப்பு உண்டு.

கோப்பை முக்கியம்

இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''நான் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. இந்திய அணிக்காக கோப்பை வென்று தருவதே எனது பணி. டெஸ்டில் நாம் தடுமாறவில்லை. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங் பற்றி கவலைப்படத் தேவையில்லை. குல்தீப் சிறந்த பவுலர். எதிரணியின் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பவுலிங் கூட்டணியை தேர்வு செய்வோம். 2க்கு பதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்துவதே சிறந்தது,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us