/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
காஷ்மீரில் கிரிக்கெட்... சச்சின் உற்சாகம்
/
காஷ்மீரில் கிரிக்கெட்... சச்சின் உற்சாகம்
ADDED : பிப் 22, 2024 10:06 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் சாலையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார் சச்சின்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின், 50. ஓய்வுக்கு பின் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார். முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள இவர், முக்கிய சுற்றுலா தலங்களை இடங்களை பார்வையிட்டு வருகிறார். உடன் மனைவி அஞ்சலி, மகள் சாரா சென்றுள்ளனர். தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைன் அண்ட் பீக் ஓட்டலில் தங்கினர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 'விசிட்' அடித்தார் சச்சின். தொடர்ந்து உரி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அமன் சேது பாலத்தை பார்வையிட்டார். இங்கு ராணுவ வீரர்களுடன் உரையாடினார்.
உரி பகுதியின் சாலையில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 'ஸ்டம்ப்சிற்கு' பதில் காலி காகித பெட்டி, 'ஆயில் கேனை' பயன்படுத்தினர். இதை பார்த்த சச்சின், காரில் இருந்து 'டக்கென' இறங்கினார். அவர்களுடன் சிறிது நேரம் 'ஸ்டிரீட் கிரிக்கெட்' விளையாடினார். தனது வழக்கமான 'ஸ்டிரெய்ட் டிரைவ்' ஷாட் அடித்து அசத்தினார். திடீரென பேட்டை தலைகீழாக பிடித்து விளையாடினார். 'இப்போதாவது என்னை அவுட்டாக்குங்கள்...பார்ப்போம்' என சவால் விடுத்தார். அப்போதும் அவுட்டாக்க முடியவில்லை. தலைகீழாக பேட்டை பிடித்தவாறு, பந்தை அருமையாக தடுத்து ஆடினார். பின் ரசிகர்களுடன் சேர்ந்து 'செல்பி' எடுத்துக் கொண்டு உற்சாகமாக விடைபெற்றார்.
பனி படர்ந்த மலைகளுக்கு மத்தியில், இயற்கை எழில்மிகு சூழலில் பேட் செய்தது, 'கிரிக்கெட் கடவுள்' சச்சினுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கும். இந்த 'வீடியோ'வை 'கிரிக்கெட்டும் காஷ்மீரும்...சொர்க்கத்தில் ஒரு போட்டி' என்ற வாசகத்துடன் தனது 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதை ஒரு லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர். 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.