ADDED : அக் 01, 2026 11:01 PM

புதுச்சேரி: புதுச்சேரியில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலிய 'ஏ' அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்ட் (4 நாள்) நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி 358 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 122/5 ரன் எடுத்து, 236 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ரஷீத் 42, தனுஷ் 33 ரன்னில் அவுட்டாகினர். இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 167 ரன்னுக்கு சுருண்டது.
அடுத்து, 191 ரன் முன்னிலையுடன், ஆஸ்திரேலிய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. கான்ஸ்டாஸ் (40), மெக்ஸ்வீனி (36) ரன் எடுக்க, 173/4 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஜேசன் (44), ஸ்காட் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 365 ரன் எடுத்தால் வெற்றி என இந்திய 'ஏ' அணி களமிறங்கியது. சாய் சுதர்சன், 12 ரன்னில் அவுட்டானார். 3வது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி, இரண்டாவது இன்னிங்சில் 28/1 ரன் எடுத்து, 337 ரன் பின்தங்கி இருந்தது. இன்று கடைசி நாளில், நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் போட்டியை 'டிரா' செய்து, தொடரை கைப்பற்றலாம்.
