/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய 'ஏ' அணி கேப்டன் ஷ்ரேயஸ்
/
இந்திய 'ஏ' அணி கேப்டன் ஷ்ரேயஸ்
ADDED : செப் 06, 2025 06:19 PM

மும்பை: இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் செப். 16-19, செப். 23-26ல் லக்னோவில் நடக்க உள்ளன. இதற்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து டெஸ்ட், ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் புறக்கணிப்பட்ட ஷ்ரேயஸ், கேப்டனாக நியமிக்கப்பட்டார். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல், துணைக் கேப்டனாகி உள்ளார். இங்கிலாந்து தொடரில் அடைந்த காயத்தில் இருந்து மீளாத கருண் நாயர் சேர்க்கப்படவில்லை.
துலீப் டிராபியில் தெற்கு மண்டல அணிக்காக 197 ரன் எடுத்த தமிழகத்தின் ஜெகதீசன், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல் பேட்டர்களாக இடம் பெற்றனர்.
வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது உள்ளனர். ரஞ்சி கோப்பை ஒரு சீசனில் அதிக விக்கெட் சாய்த்து சாதனை படைத்த ஹர்ஷ் துபே (69) வாய்ப்பு பெற்றுள்ளார்.
ராகுல் இடம்
இந்திய அணி சொந்தமண்ணில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், இரண்டாவது போட்டியில் லோகேஷ் ராகுல், முகமது சிராஜ் விளையாட உள்ளனர்.
அணி விபரம்: ஷ்ரேயஸ், அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜுரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார், தனுஷ் கொடியன், பிரசித் கிரஷ்ணா, குர்னுார் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாகூர்.