/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்
/
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்
ADDED : ஜூலை 08, 2025 11:21 PM

பல்லேகெலே: இலங்கை சென்ற வங்கதேச அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி நேற்று பல்லேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (35), மதுஷ்கா (1) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் அசலங்கா 58 ரன் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் (16), ஜனித் லியனாகே (12) ஏமாற்றினர். மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் சதம் கடந்தார். இவர் 114 பந்தில் 124 ரன் எடுத்தார். இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் (28), தன்ஜித் (17) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. நஜ்முல் ஷாண்டோ 'டக்' அவுட்டாக, கேப்டன் மெஹிதி ஹசன் 28 ரன் எடுத்தார். தவ்ஹித் (51) அரைசதம் அடுத்து வெளியேறினார். பின் வந்த வீரர்கள் ஏமாற்ற, வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு சுருண்டது. 99 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை, 2-1 என தொடரை கைப்பற்றியது.