
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, மகாராஷ்டிரா, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது மூன்றாவது, கடைசி லீக் சுற்று போட்டி நடக்கின்றன.
திருவள்ளூரில் நடக்கும் 'பி' பிரிவு போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், பெங்கால் அணிகள் மோதுகின்றன. தமிழக அணி 203 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 38 ரன் பின்தங்கிய நிலையில் அடுத்து களமிறங்கிய தமிழக அணி, இரண்டாவது நாள் முடிவில் 147/3 ரன் எடுத்து, 109 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. முகமது அலி (64), கேப்டன் ஷாருக்கான் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.
சத்தீஷ்கருக்கு எதிரான மற்றொரு போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 266 ரன்னில் ஆல் அவுட்டானது. சத்தீஷ்கர் அணி 187 ரன்னில் சுருண்டது. தமிழகத்தின் ஹேம்சுதேஷன் 6 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய தமிழக அணி 2வது நாள் முடிவில் 81 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 160 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.
மற்றொரு போட்டியில் மும்பை-ஹரியானா மோதுகின்றன. மும்பை அணி 346/9 ரன் எடுத்தது. ஹரியானா அணி 364 ரன்னில் ஆல் அவுட்டாகி, 18 ரன் முன்னிலை பெற்றது.