/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக்
/
தென் ஆப்ரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக்
ADDED : ஆக 06, 2024 10:08 PM

புதுடில்லி: தென் ஆப்ரிக்க உள்ளூர் 'டி-20' தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஆகிறார் தினேஷ் கார்த்திக்.
தென் ஆப்ரிக்காவில் 'எஸ்.ஏ.20' உள்ளூர் 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் இரு தொடரில் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பை வென்றது. இதன் மூன்றாவது சீசனுக்கான பார்ல் ராயல்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 39, ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். கடந்த 2022, 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைசியாக விளையாடினார்.
இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். 2024 சீசனில் 14 போட்டியில் 326 ரன் எடுத்தார்.
கடந்த ஜூன் மாதம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்ற இவரை, பெங்களூரு அணி, ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
தற்போது எஸ்.ஏ.20' ல் பங்கேற்க உள்ளது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது:
தென் ஆப்ரிக்கா சென்றது, அங்கு விளையாடியது என பல இனிமையான நினைவுகள் உள்ளன. தற்போது மீண்டும் அங்கு கிரிக்கெட் விளையாட இருப்பது, ராயல்ஸ் அணிக்காக போட்டிகளில் வெற்றி பெறுவது உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதால், எனக்கு கிடைத்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. இந்த அணியில் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் சீசனில் அணியின் வெற்றிக்காக போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.