/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பேட்டிங்' வரிசையில் மாற்றம் * என்ன சொல்கிறார் அக்சர் படேல்
/
'பேட்டிங்' வரிசையில் மாற்றம் * என்ன சொல்கிறார் அக்சர் படேல்
'பேட்டிங்' வரிசையில் மாற்றம் * என்ன சொல்கிறார் அக்சர் படேல்
'பேட்டிங்' வரிசையில் மாற்றம் * என்ன சொல்கிறார் அக்சர் படேல்
ADDED : ஜன 20, 2025 10:56 PM

கோல்கட்டா: '' இந்திய 'டி-20' அணியில் துவக்க ஜோடியை தவிர, மற்ற அனைத்து வீரர்களும், எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக உள்ளோம்,'' என்றார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இரு அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'டி-20' உலக சாம்பியன் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து துணைக் கேப்டன் அக்சர் படேல் 31, கூறியது:
இந்திய 'டி-20' அணியை பொறுத்தவரையில் கடந்த 2024 முதல் தெளிவான திட்டத்துடன் செயல்படுகிறோம். துவக்க ஜோடி மட்டும் தான் இப்போதைக்கு மாறாதது. மற்றபடி 3 முதல் 7 வரையிலான பேட்டிங் ஆர்டரில், சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து வீரர்களும் மாறி மாறி களமிறங்கி வருகிறோம்.
குறிப்பிட்ட வீரர், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் களமிறங்குவார் என்று எதுவும் உறுதி இல்லை. அன்றைய பயிற்சியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஏற்ப, பேட்டிங் ஆர்டர் மாறும். ஏனெனில் சரியான நேரத்தில், சரியான பேட்டரை பயன்படுத்திக் கொள்வது தான் 'டி-20' கிரிக்கெட்.
கட்டாயம் இல்லை
இந்திய அணியில் தற்போது சீனியர் வீரர்கள் சிலர் விடைபெறும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு மாற்றாக, பொருத்தமான வீரர்களை கேப்டன், தேர்வாளர்கள் பார்த்து தேர்வு செய்வர். என்னைப் பொறுத்தவரையில் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தி, சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். இதைச் சரியாகச் செய்தால் அணியில் எனக்கு தானாக இடம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷமிக்கு வரவேற்பு
அக்சர் படேல் கூறுகையில்,'' கடைசியாக உலக கோப்பை பைனலில் விளையாடினார் முகமது ஷமி. ஆப்பரேஷனுக்குப் பின் மீண்டு வந்த இவர், சையது முஷ்தாக், விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டார். புதிய பந்தில் அசத்தும் ஷமி, மீண்டும் திரும்பியது, அணிக்கு ஊக்கம் தருகிறது. உலக கோப்பை தொடர் போல, மீண்டும் மிரட்டுவார் என நம்பலாம்,'' என்றார்.