UPDATED : பிப் 12, 2025 10:57 PM
ADDED : பிப் 11, 2025 11:15 PM

ஆமதாபாத்: டெஸ்ட், 'டி-20', ஒருநாள், ஐ.பி.எல்., என நான்கு வித கிரிக்கெட்டில் ஆமதாபாத் மைதானத்தில் சதம் அடித்த முதல் வீரர் ஆனார் சுப்மன் கில்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 112 ரன் எடுத்த சுப்மன் கில், ஒரே மைதானத்தில் மூன்றுவித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார். முன்னதாக இவர் 2023ல் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த 'டி-20' (நியூசி.,), டெஸ்டில் (ஆஸி.,) சதம் விளாசி இருந்தார்.
இதற்கு முன் டுபிளசி (ஜோகனஸ்பர்க், தெ.ஆப்.,), வார்னர் (அடிலெய்டு, ஆஸி.,), பாபர் ஆசம் (கராச்சி, பாக்.,), குயின்டன் டி காக் (செஞ்சுரியன், தெ.ஆப்.,) இதுபோல ஒரே மைதானத்தில் மூன்று வித கிரிக்கெட்டில் சதம் அடித்தனர்.
* தவிர, ஆமதாபாத் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியிலும் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார்.
அதிவேக 2500 ரன்
இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார்.
* ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 2500 ரன் எடுத்த முதல் வீரர் ஆனார். இவர், 50 போட்டியில் 2587 ரன் எடுத்துள்ளார். ஆம்லா (2486, தெ.ஆப்.,), இமாம் உல் ஹக் (2386, பாக்.,), பகர் ஜமான் (2262, பாக்.,) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
* முதல் 50 ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் ஆனார் சுப்மன் கில் (7 சதம்). தவான் (6), கோலி (5), ராகுல் (5), காம்பிர் (5) அடுத்து உள்ளனர்.
ஏழாவது வீரர்
இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் 50 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்த 7வது இந்திய வீரர் ஆனார் சுப்மன் கில். இங்கிலாந்து தொடரில் இவர் 87, 60, 112 ரன் எடுத்தார். முன்னதாக இலங்கைக்கு எதிராக ஸ்ரீகாந்த் (1982), வெங்சர்கார் (1985), முகமது அசார் (1993), தோனி (2019, ஆஸி.,), ஸ்ரேயாஸ் (2020, நியூசி.,), இஷான் கிஷான் (2023, வெ.இண்டீஸ்) இதுபோல ரன் எடுத்தனர்.

