ADDED : செப் 08, 2026 11:21 PM

துபாய்: உலகின் 'நம்பர்-1' அணி இந்தியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் பங்கேற்கும் ஜப்பான் ('நம்பர்-41') அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா-ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு துாதரக உறவை கொண்டாடும் வகையில் இரு அணிகளும் முதன் முறையாக 'டி-20' போட்டியில் மோத உள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்போட்டி, வரும் 22ம் தேதி, ஜப்பானின் சனோ நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதற்கு சுஜுகி கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் நாட்டு பிரதமர்கள் மோடி, சனாயே டகாய்ச்சி இணைந்து எடுத்த 'ஸ்போர்ட் 75' என்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இப்போட்டி நடக்கும்.
இதற்கான 15 பேர் கொண்ட ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டது. ஜப்பான் அணிக்காக அதிக ரன் எடுத்த கென்டெல் கடோவாகி-பிளமிங் 30, கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 55 'டி-20' போட்டியில் 1871 ரன் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக வடரு மியாவுச்சி, ஜாம்பவான், மறைந்த ஷென் வார்னை கவர்ந்த 'லெக் ஸ்பின்னர்' மகோடோ டனியமா, ஆல் ரவுண்டர் ஜேக் நய்ர்ன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான மோதலுக்கு தயாராக ஜப்பான் அணி, வரும் 19, 20ல் ஹாங்காங்குடன் விளையாட உள்ளது.
