/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சவாலான நியூசி., டெஸ்ட் தொடர் * சொல்கிறார் பயிற்சியாளர் காம்பிர்
/
சவாலான நியூசி., டெஸ்ட் தொடர் * சொல்கிறார் பயிற்சியாளர் காம்பிர்
சவாலான நியூசி., டெஸ்ட் தொடர் * சொல்கிறார் பயிற்சியாளர் காம்பிர்
சவாலான நியூசி., டெஸ்ட் தொடர் * சொல்கிறார் பயிற்சியாளர் காம்பிர்
ADDED : அக் 14, 2024 11:06 PM

பெங்களூரு: ''நியூசிலாந்து அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும்,'' என பயிற்சியாளர் காம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் துவங்குகிறது.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறியது:
டெஸ்டில் ஒரே மாதிரி விளையாடிக் கொண்டிருந்தால், அதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல. ஒரே நாளில் 400 ரன் எடுக்கும் திறன் வேண்டும். தேவைப்பட்டால் 2 நாள் முழுவதும் பேட்டிங் செய்து போட்டியை 'டிரா' செய்யவும் வேண்டும். இது தான் வளர்ச்சி. இதற்குப் பெயர் தான் டெஸ்ட். இதைத் தான் வீரர்களிடம் தெரிவித்துள்ளேன்.
ஏனெனில் போட்டியில் வெற்றி பெறுவது தான் எங்களது முதல் லட்சியம். ஒருவேளை 'டிரா' செய்ய வேண்டிய சூழ்நிலை என்றால், இதற்கும் எங்களிடம் வீரர்கள் உள்ளனர். ஆனால், அது 2 அல்லது 3வது முயற்சி தான். எங்களைப் பொறுத்தவரையில் வீரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலில் விளையாட வேண்டும் என விரும்புகிறோம்.
அவர்களால் ஒரே நாளில் 400 முதல் 500 ரன்கள் எடுக்க முடியும். இவர்களை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும். 'ரிஸ்க்' எடுத்து விளையாடினால் கட்டாயம் பரிசு உண்டு. சில நேரங்களில் தவறும் நடக்கலாம். 100 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆகலாம். இருப்பினும் 'ரிஸ்க்' எடுத்து விளையாட எப்போதும் ஆதரவு தருவோம். போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், கிரிக்கெட்டை இப்படித்தான் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.
கடின சவால்
நியூசிலாந்து முற்றிலும் வித்தியாசமான, சவாலான அணி. எங்கள் அணியை வீழ்த்தக்கூடிய திறமை கொண்ட வீரர்கள் இங்கு உள்ளனர். தொடர்ந்து போராட்டத்தை வெளிப்படுத்துவர். இதனால் வரும் டெஸ்ட் தொடர், மிகவும் சவாலாக இருக்கும்.
அதேநேரம் யாருக்காகவும் நாங்கள் பயப்படப் போவதில்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த எதிரணியாக இருந்தாலும், தேசத்திற்காக ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறவே முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியில் இந்திய வீரர்கள்
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியை துவக்கினார். 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் பவுலிங் பயிற்சி செய்தனர். ரிஷாப் பன்ட், கோலி, ராகுல் பேட்டிங்கில் ஈடுபட்டனர்.
மூன்று 'வேகங்கள்'
ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள தொடருக்கு தயாராகும் வகையில் பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது. இதற்கேற்ப ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டன. ஆனால், சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 37 விக்கெட்டுகளை (மொத்தம் 40) சுழற்பந்து வீச்சில் தான் இழந்தது. எனினும், 'ஆடுகளம், சூழ்நிலைக்கு ஏற்பட களமிறங்கும் அணி முடிவு செய்யப்படும்,' என்றார் காம்பிர்.
அட்டவணை
தேதி போட்டி இடம்
நாளை முதல் டெஸ்ட் பெங்களூரு
அக். 24-28 2வது டெஸ்ட் புனே
நவ. 1-5 3வது டெஸ்ட் மும்பை
* போட்டி காலை 9:30 மணிக்கு துவங்கும்.

