ADDED : ஜன 29, 2025 11:00 PM

கோல்கட்டா: தனது திறமை குறித்து விமர்சனம் செய்த கவாஸ்கர் மீது, பி.சி.சி.ஐ.,யிடம் ரோகித் புகார் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா 37. இவரது தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக இழந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 1-3 என கோட்டை விட்டது. கேப்டன் பணியில் மட்டுமன்றி, பேட்டிங்கிலும் ஏமாற்றும் ரோகித், ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்டில் 31 ரன் மட்டும் எடுத்தார். கடைசி டெஸ்டில் தாமாக முன்வந்து போட்டியில் இருந்து விலகினார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியிலும் ஏமாற்றினார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,'' ரோகித்தின் பேட்டிங் மட்டுமன்றி, கேப்டன் திறமையும் குறைந்து விட்டது. இதனால் தான் சிட்னி டெஸ்டில் விலகினார். இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.
இது, ரோகித்தை காயப்படுத்தியுள்ளது போல. இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கவாஸ்கர் மீது முறைப்படி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது.
ரோகித் தரப்பில் ஒருவர் கூறுகையில், ' தன்னை கவாஸ்கர், இந்தளவுக்கு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை,' என ரோகித் நினைத்தார். இதுபோன்ற விஷயங்கள் தனக்கு நெருக்கடி தந்தன. இதனால் பி.சி.சி.ஐ.,யிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது,' என்றார்.
ரசிகர் ஒருவர் கூறுகையில்,'' அனுபவத்தின் அடிப்படையில் கவாஸ்கர் விமர்சிக்கிறார். இதில் இருந்து ரோகித் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். மற்றொருவர்,' கவாஸ்கர் எல்லை மீறி பேசுகிறார். 'அட்வைஸ்' செய்ய நினைத்தால் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். இப்படி பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது,'' என்றார்.

