ADDED : அக் 07, 2026 11:02 PM

லக்னோ: ''பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சரியான நேரத்தில் சதம் அடித்துள்ளார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 'டி-20' போட்டி லக்னோவில் நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கைத் துரத்திய இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 43 பந்தில் 102 ரன் விளாச, வெற்றி எளிதானது. கடந்த 2017, நவ. 1ல் நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20'ல் அறிமுகம் ஆன இவர், 67 போட்டியில் 10 அரைசதம் மட்டும் அடித்திருந்தார். முதன் முறையாக தனது 68 வது சர்வதேச 'டி-20'ல் சதம் விளாசினார்.
ஷ்ரேயஸ் ஐயர், 31, குறித்து இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' கவாஸ்கர் 77, கூறியது:
இந்திய 'டி-20' அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர், பொறுப்பேற்ற பின், அவரது பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் சேர்க்க போராடினார். சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் பார்ம் மோசமாக இருந்தது.
ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது முதல் 'டி-20'ல் சதம் அடித்து, இழந்த பார்மை மீட்டுள்ளார்.
இலக்கை 'சேஸ்' செய்த சூழலில், போட்டியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, 'மிடில் ஓவர்களில்' வேகமாக ரன்கள் சேர்த்து திறமை நிரூபித்தார். 28 பந்தில் அரைசதம் எட்டிய இவர், பின் அப்படியே மின்னல் வேக ரன்குவிப்புக்கு மாறினார். அடுத்த 15 பந்தில் 50 ரன் விளாச, எளிதாக சதம் கடந்தார்.
இவரது பேட்டிங் குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும், இந்த சதம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. தான் மீண்டும் சிறப்பான பேட்டிங்கிற்கு திரும்பி விட்டதாக 'சிக்னல்' கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
