'சுழல்' சவாலுக்கு இந்தியா 'ரெடி' * பயிற்சி போட்டி இன்று துவக்கம்
'சுழல்' சவாலுக்கு இந்தியா 'ரெடி' * பயிற்சி போட்டி இன்று துவக்கம்
ADDED : ஆக 06, 2026 11:09 PM

கொழும்பு: இந்தியா, இலங்கை லெவன் அணிகள் மோதும் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஆக. 15ல் காலேயில் துவங்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) லெவன் அணியுடன், மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் (கொழும்பு) இன்று களமிறங்குகிறது.
இந்திய அணி கடைசியாக சொந்தமண்ணில் நியூசிலாந்து (2024, 0-3), தென் ஆப்ரிக்க (2025, 0-2) அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்தது. இதில் அஜாஸ் படேல் (15 விக்.,), சான்டர்னர் (13), ஹார்மர் (17) என சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கி சரிந்தது.
இலங்கை அணியிடமும் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தவிர, அவர்களது சொந்தமண்ணில் மிரட்டுவர். இலங்கை செல்லும் முன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ராகுல் உள்ளிட்டோர், சுழற்பந்து வீச்சை சமாளிக்க பிரத்யேக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் இடம் பெறாத, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், தனுஷ் கொடியன், விப்ராஜ் நிஹாம் என நான்கு 'சுழல்' பவுலர்கள், வலைப்பயிற்சியில் பந்துவீச இலங்கை சென்றுள்ளனர்.
கடைசியாக 2017ல் இந்திய அணி, இலங்கை மண்ணில் டெஸ்டில் பங்கேற்றது. அப்போதைய அணியில் இருந்த ராகுல், குல்தீப், ஜடேஜா தவிர, மற்ற அனைவரும் புதியவர்கள். இவர்களுக்கு பயிற்சி ஆட்டம் உதவியாக அமையும்.
சிராஜ் தலைமை
வேகப்பந்து வீச்சில் பும்ரா இல்லாத நிலையில், சிராஜ் உடன் பிரசித் கிருஷ்ணா, சமீபத்தில் இந்திய 'ஏ' அணிக்காக இலங்கையில் கைகொடுத்த சரன்ஸ் ஜெயின், குர்னுார் பிரார் இணைய உள்ளனர். சுழலில் குல்தீப், ஜடேஜா உளளனர்.
அனுபவம் பலம்
எஸ்.எல்.சி., லெவன் அணிக்கு, மூன்று டெஸ்டில் பங்கேற்ற அனுபவம் கொண்ட சோனல் தினுஷா கேப்டனாக உள்ளார். தவிர, விஷ்வா, லகிரு குமாரா என சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளது, இந்தியாவுக்கு சவால் தரலாம். சுழலில் இசிதா விஜேசுந்தரா, ரமேஷ் மெண்டிஸ் உள்ளனர்.
மழை வருமா
கொழும்புவில் வானிலை மோசமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பயிற்சி ஆட்டம் பாதிக்கப்படலாம்.
சுப்மன் கில் காயம்
இந்திய அணியில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் என பலர் காயத்தால் அவதிப்படுகின்றனர். நேற்றைய பயிற்சியின் போது, குர்னுார் பிரார் வீசிய பந்து, கேப்டன் சுப்மன் கில் வலது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. உடனடியாக பயிற்சியை விட்டு கிளம்பினார். சிகிச்சைக்குப் பின், மீண்டு வந்த சுப்மன், பேட்டிங்கை தொடர்ந்தார்.
ஆடுகளம் அதிருப்தி
முதல் டெஸ்ட் நடக்கும் காலே ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே, பந்தில் திருப்பம் ஏற்படும். இதுபோன்ற ஆடுகளத்தை, இன்று துவங்கும் பயிற்சி போட்டியில் எதிர்பார்த்தது இந்தியா. மாறாக, கொழும்பு என்.சி.சி., ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக உள்ளன. இது இந்திய அணி நிர்வாகத்திடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுகள பராமரிப்பாளர் பிரான்கே கூறுகையில், ''இலங்கை கிரிக்கெட் போர்டு முடிவின் படி தான் ஆடுகளம் தயாராகியுள்ளது. மூன்று நாள் போட்டி என்பதால், இப்படித் தான் புற்களுடன் இருக்கும். இரண்டு அல்லது மூன்றாவது நாளில் சுழலுக்கு சாதகமாக இருக்கும்,'' என்றார்.
