மீண்டு வருமா இந்திய அணி * இலங்கை டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பு
மீண்டு வருமா இந்திய அணி * இலங்கை டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 12, 2026 11:08 PM

காலே: சொந்தமண்ணில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விகளில் இருந்து மீண்டு, இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் இரு சீசனில் (2019-21, 2021-23) பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. கடந்த முறை மூன்றாவது இடம் (2023-25) பிடித்தது. தற்போது, நான்காவது சீசனில் (2025-27), இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
கடைசியாக சொந்தமண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவிடம் அடைந்த தோல்விகள், புள்ளிப்பட்டியலில் பின்தங்க காரணமாக அமைந்து விட்டது. இதனால், இலங்கை மண்ணில் மீண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் காம்பிர் தலைமையிலான இந்திய அணிக்கு, அடுத்த இரு வாரங்கள் பல சவால் காத்திருக்கின்றன.
மீள்வது முக்கியம்
சொந்தமண்ணில் அடைந்த தோல்விகள், இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தியது மட்டுமன்றி, வீரர்களின் மன உறுதியை குலைத்து விட்டது. உள்ளூரில் அசைக்க முடியாத அணி என ஆதிக்கத்தை செலுத்திய இந்தியா, அடுத்தடுத்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டு போனது.
அடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்கள் வரவுள்ள நிலையில், இலங்கை தொடர் இந்திய வீரர்கள் மீண்டு வர, நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தொடரின் வெற்றி, இந்திய வீரர்களின் ஒற்றுமையை அதிகரிக்கும். இக்கட்டான நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை கற்றுக் கொடுக்கும்.
மாறுமா திட்டம்
'கடைசி வீரர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும்,' என பயிற்சியாளர் காம்பிரின் திட்டம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் 'ஸ்பெஷலிஸ்ட்' பவுலர்கள் இடம் பெற முடியாமல் போக, இந்தியா தற்காப்பு நிலைக்கு தள்ளப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தர் இல்லாத நிலையில், அணியில் மீண்டும் 'ஆல் ரவுண்டர்களை' சேர்ப்பதற்குப் பதிலாக, சுழல், வேகம் என ஒவ்வொன்றுக்கும் சரியான பவுலர்களை சேர்க்க வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் துணிச்சலாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றம் தருகிறார். இலங்கையில், போட்டியின் சூழலுக்கு ஏற்ப இவர், விளையாட வேண்டும்.
சுழல் நெருக்கடி
நவீன தலைமுறை இந்திய பேட்டர்கள், தரமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறுகின்றனர். சமீபத்தில் சொந்தமண்ணில் சொதப்பியதால், சுழல் பலவீனத்தை எதிரணிகள் மீண்டும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
தவிர, இலங்கை மண்ணில், அவர்களது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அடுத்து 2027, ஜனவரில் இந்திய வரும் ஆஸ்திரேலியாவை சந்திக்க, இலங்கையில் 'சுழலில்' சிறப்பாக செயல்பட வேண்டும். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இலங்கை தொடரில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றாலும், புள்ளிப்பட்டியலில் பெரியளவு முன்னேற்றம் கிடைக்காது. எனினும், இந்திய அணியின் 'உலக' சாம்பியன்ஷிப் பைனல் கனவு நீடிக்கலாம்.
அடுத்து வரும் தொடர்களில் நிம்மதியாக செயல்படவும், சரியான அணியை கட்டமைக்கவும், சரியான பாதையில் செல்வதை உறுதி செய்யவும், இலங்கைக்கு எதிரான வெற்றி உதவலாம். இதனால் இந்தியா மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
ஐந்தாவது இடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், நான்காவது சீசனில், இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், இந்திய அணி, 9 டெஸ்டில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் (1 'டிரா'), 48.15 சதவீத புள்ளி பெற்று, 5வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (87.50), தென் ஆப்ரிக்கா (75.00) முதல் இரு இடத்தில் உள்ளன.
இலங்கை அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் காயத்தால் விலகியதால், கடந்த 2023ல் நியூசிலாந்து டெஸ்டில் பங்கேற்ற பின், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார் டிக்வெல்லா. அறிமுக வீரராக 'ஆப் ஸ்பின்னர்' நுவந்தா, பசிந்து சூரியபண்டாரா இடம் பெற்றனர்.
அணி விபரம்:
தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ் (துணைக் கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், லகிரு உதனா, லகிரு குமாரா, நிஷான் மதுஷ்கா, தில்சன் மதுஷன்கா, தினேஷ் சண்டிமால், பசிந்து, சோனல் தினுஷா, டிக்வெல்லா, பிரபாத் ஜெயசூரியா, கேஷரா நுவந்தா, மிலன் ரத்னாயகே, அசிதா பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ.
ரஹானே புதிய அவதாரம்
இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் ரஹானே 38. மொத்தம் 85 டெஸ்ட் (5077 ரன், 12 சதம்), 90 ஒருநாள் (2962, 3 சதம்), 20 'டி-20' போட்டியில் (375) பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது இலங்கை தொடரில் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். அவர் கூறுகையில்,'' எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதிலும், போட்டியின் சூழல், முக்கிய தருணங்கள் குறித்த எனது பார்வையை ரசிகர்களுக்கு வழங்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.
