பயிற்சியில் இந்திய வீரர்கள் * மூன்று 'ஸ்பின்னர்கள்' வாய்ப்பு
பயிற்சியில் இந்திய வீரர்கள் * மூன்று 'ஸ்பின்னர்கள்' வாய்ப்பு
ADDED : ஆக 13, 2026 11:11 PM

காலே: காலே டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணியில் குல்தீப், ஜடேஜா, மானவ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளை துவங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் (ஆக, 23-27) நடக்கும்.
இதில் சாதிக்க இந்திய அணியினர் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சாய் சுதர்சன் இல்லாத நிலையில், இவரது இடத்தில் யார் களமிறங்குவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துருவ் ஜுரெலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கேற்ப, நேற்று 'சிலிப்' பகுதி பீல்டிங், அடுத்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். கடைசியாக 2025ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக சதம் (100) அடித்த ஜுரெல், பின் 44, 6, 14, 13, 0, 2, 19 என தடுமாறினார். இதில் கடைசி 7 இன்னிங்சில், 5ல் சுழலில் சரிந்தார்.
காலேயில் பந்தில் அதிக திருப்பம் ஏற்படும் என நம்பப்படும் நிலையில் கடின சவால் காத்திருக்கிறது. மறுபக்கம் சர்பராஸ் கான், சுழலில் துணிச்சலாக செயல்படுவது, ஜுரெலுக்கு நெருக்கடி தரலாம்.
மூன்று சுழலா
மறுபக்கம் நாளை களமிறங்கும் இந்திய அணியில் 'வேகத்தில்' சிராஜுடன், பிரசித் கிருஷ்ணா அல்லது குர்னுார் பிரார் சேர்க்கப்படலாம்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் காலே ஆடுகளத்திற்கு ஏற்ப, குல்தீப், ஜடேஜா, மானவ் என மூவர் இடம் பெற வாய்ப்புள்ளது.
இதுகுறித்து இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் கூறியது:
காலே மைதான ஆடுகளத்தை பார்க்கும் போது, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது தான் சரியாக இருக்கும். குல்தீப், மணிக்கட்டு சுழலில் 'மேஜிக்' நிகழ்த்துவார். ஜடேஜா துல்லியமாக பந்து வீசுவார். மானவ் சுதார், 'கிளாசிக்கல்' ஸ்பின்னராக உள்ளார். இந்த மூவரும் இடது கை பவுலர்களாக இருப்பது குறித்து கவலைப் படத் தேவையில்லை.
ஆனால் இவர்களை, கேப்டன் சுப்மன் கில் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. மற்றபடி, எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் சாய்க்கும் திறமை, நமது பவுலர்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காலே 'கிங்ஸ்'
பொதுவாக, ஒவ்வொரு கிரிக்கெட் மைதானங்களில் சில வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவர். லண்டனின் லார்ட்சில் ஸ்டூவர் பிராட் (ஆஸி.,), தென் ஆப்ரிக்காவின் நியூலேண்ட்சில் காலிஸ், இலங்கையின் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜெயவர்தனே, முரளிதரன் உள்ளிட்டோர் எதிரணிகளுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
இந்த வரிசையில் காலே மைதானத்தில் பிரபாத் ஜெயசூர்யா (11 டெஸ்டில் 81 விக்.,), ரமேஷ் மெண்டிஸ் (12ல் 64) என இருவரும் 145 விக்கெட் சாய்த்து, சுழலில் மிரட்டுகின்றனர். வரும் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு தொல்லை தரலாம்.
