இலக்கை எட்டியது எப்படி * மகிழ்ச்சியில் வைபவ் சூர்யவன்ஷி
இலக்கை எட்டியது எப்படி * மகிழ்ச்சியில் வைபவ் சூர்யவன்ஷி
ADDED : ஜூன் 02, 2026 11:10 PM

புதுடில்லி: ''இந்த சீசனில் 700 ரன் எடுக்க வேண்டுமென அலைபேசியில் எழுதி வைத்தேன். தனிப்பட்ட முறையில், இந்த இலக்கை எட்டி சாதித்தேன்,''என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
கிரிக்கெட் லீக் தொடரில் (19வது சீசன்) 'பயமறியா' பேட்டராக அசத்தினார் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி. உலகின் தலைசிறந்த பவுலர்களான பும்ரா, ரபாடா, கம்மின்ஸ் போன்றோரை பதம் பார்த்தார். ராஜஸ்தான் அணிக்காக 16 போட்டியில் 72 சிக்சர் உட்பட 776 ரன் (சராசரி 48.5, ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்தார். அதிக ரன் எடுத்ததற்கான 'ஆரஞ்ச் கேப்' வென்ற இளம் வீரர், அதிக சிக்சர் அடித்தவர், அதிக மதிப்புமிக்க வீரர் உட்பட 5 விருதுகளை தட்டிச் சென்றார். தகுதிச் சுற்று-2ல் ராஜஸ்தான் தோற்றதால், இவரது கோப்பை கனவு நனவாகவில்லை.
இது பற்றி வைபவ் சூர்யவன்ஷி கூறியது:
கிரிக்கெட் லீக் தொடர் துவங்குவதற்கு முன், எனது அலைபேசியில் உள்ள 'நோட்ஸ்' செயலியில், இந்த சீசனில் 700 ரன் எடுக்க வேண்டுமென எழுதி வைத்திருந்தேன். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் எனது ஸ்கோரை குறித்து வைப்பேன். 776 ரன் எடுத்ததன் மூலம், தனிப்பட்ட இலக்கை எட்டினேன். ஆனால், ராஜஸ்தான் சாதிக்க வேண்டும் என நினைத்தது நடக்கவில்லை. அடுத்த ஆண்டு கோப்பை வெல்ல முடியும் என நம்புகிறேன்.
கடவுளுக்கு நன்றி
முன்பு 'டிவி'யில் பெரிய வீரர்கள் 'ஆரஞ்ச் கேப்' அணிந்து பார்த்திருக்கிறேன். அதை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்து, அந்த உணர்வை அறிய ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், கடவுள் கருணையால் இப்போது என் தலையில் 'ஆரஞ்ச் தொப்பி' இருக்கிறது. இதற்காக கடவுளுக்கு நன்றி.
இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி, நிறைய சாதிக்க வேண்டும். டெஸ்ட் தான் சிறந்தது, என தந்தை அடிக்கடி கூறுவார். சில ரஞ்சி போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளேன். டெஸ்டில் பிரகாசிக்க, கடின பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். இந்தியா, உள்ளூர் போட்டி, கிரிக்கெட் லீக் என எந்த வகை போட்டியாக இருந்தாலும், எனது பங்களிப்பை சிறப்பாக வழங்க முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு எப்போ
இந்திய 'டி-20' அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில்,''இந்திய கிரிக்கெட்டின் அற்புத குழந்தை வைபவ். வரும் நாட்களில் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார். கிரிக்கெட் லீக் தொடரில் பெரும்பாலான போட்டிகளை இந்திய தேர்வாளர்கள் நேரில் பார்த்தனர். வைபவ் ஆட்டத்தையும் கண்காணித்திருப்பர். விரைவில் நடக்க உள்ள அயர்லாந்து, இங்கிலாந்து 'டி-20' தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் போது, இவரது சிறப்பான ஆட்டத்தை கணக்கில் கொண்டு, நல்ல முடிவு எடுப்பர்,''என்றார்.
சச்சின் வழியில்
இந்திய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' அதுல் வாசன் கூறுகையில்,''வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான ஆட்டம் சச்சினை நினைபடுத்துகிறது. சச்சின், 16 வயதில் கராச்சி டெஸ்டில் (1989, எதிர், பாக்.,) அறிமுகமானார். அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டார். இவருக்கு கடவுள் கொடுத்த அதே சிறப்பு திறமையை வைபவமிடமும் காண்கிறேன். 'டி-20' ஸ்பெஷலிஸ்ட் மட்டும் அல்லாமல் டெஸ்டிலும் களமிறங்க வேண்டும். அப்போது தான் முழுமையாக கிரிக்கெட் வீரர் அந்தஸ்தை பெற முடியும். 'டி-20' அரங்கில் மிரட்டிய வெஸ்ட் இண்டீசின் கெய்ல் கூட, ஒரு டெஸ்ட் இன்னிங்சில், 333 ரன் (எதிர், இலங்கை, 2010) குவித்தார்.
இந்திய அணிக்காக விளையாட வைபவ் தயாராக உள்ளார். சச்சின், டிராவிட், கோலி போல நீண்ட காலம் விளையாட வேண்டும்,'' என்றார்.
