ADDED : ஆக 04, 2026 11:10 PM

புதுடில்லி: ''தாக்குதல் பாணியில் செயல்பட்டதால் தான், டெஸ்ட் அரங்கின் தவிர்க்க முடியாத பவுலராக திகழ்கிறார் ஜடேஜா,'' என புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜடேஜா 37. 89 டெஸ்டில் 348 விக்கெட் சாய்த்துள்ளார். 4,095 ரன் எடுத்துள்ளார். வரும் இலங்கை தொடரில் இடம் பெற்றுள்ள ஜடேஜா குறித்து, இந்திய அணியின் புஜாரா 38, கூறியது:
டெஸ்ட் அரங்கில், துவக்கத்தில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் தான் ஜடேஜா பந்து வீசினார். ஆடுகளம் சற்று கைகொடுத்தால் மட்டும் விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சிப்பார். இதன் பின் தனது பலத்தை உணர்ந்து கொண்டார் ஜடேஜா.
சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு போட்டியிலும், சரியான 'லென்த்தில்' பந்துவீசி, ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இதுபோல தாக்குதல் பாணியில் பந்து வீசியதால் தான், சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்ட் அரங்கில், அனைத்து விதமான ஆடுகளங்களிலும், தவிர்க்க முடியாத பவுலராக திகழ்கிறார் ஜடேஜா.
தொடர்ந்து துல்லியமாக செயல்பட்டு, பவுலிங்கில் மாற்றம் செய்து, சூழலை பயன்படுத்திக் கொள்ளும் திறமை காரணமாக, சொந்தமண் மட்டுமன்றி, அன்னிய மண்ணிலும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
