/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் சுபம் * காஷ்மீர் அணி நிதான ஆட்டம்
/
சதம் விளாசினார் சுபம் * காஷ்மீர் அணி நிதான ஆட்டம்
ADDED : பிப் 24, 2026 11:08 PM

ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பை பைனல் முதல் நாளில் காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 284/2 ரன் எடுத்தது. சுபம் பண்டிர் சதம் விளாசினார்.
ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நேற்று துவங்கிய பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற காஷ்மீர் அணி கேப்டன் டோக்ரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
காஷ்மீர் அணிக்கு இக்பால், ஹாசன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. 10.2 ஓவரில் 18 ரன் எடுத்த போது, பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' இக்பால் (6) அவுட்டானார். அடுத்து ஹாசன், சுபம் பண்டிர் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்த போது, 88 ரன் எடுத்திருந்த ஹாசன், பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். பின் வந்த டோக்ரா, மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் 48 பந்தில் 9 ரன் எடுத்த போது, வைஷாக் விஜயகுமார் வீசிய 'பவுன்சரில்' இருந்து தப்பிக்க, குனிந்தார். இருப்பினும், பந்து வலது 'கிளவ்சில்' பட்டு தோளில் தாக்கியது. இதனால் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட, 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார்.
சுபம் சதம்
மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுபம், சதம் கடந்தார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த அப்துல் சமத், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர்களை பிரிக்க, கர்நாடக பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முதல் நாள் முடிவில் காஷ்மீர் அணி, முதல் இன்னிங்சில் 284/2 ரன் எடுத்திருந்தது. சுபம் (117), அப்துல் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

