ADDED : பிப் 18, 2025 11:28 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை அரையிறுதி முதல் இன்னிங்சில் மும்பை அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90 வது சீசன் தற்போது நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, விதர்பா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்று களமிறங்கிய விதர்பா அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 308/5 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. யாஷ் ரத்தோட் (54) அரைசதம் அடித்தார். கேப்டன் அக்சய் வாட்கர் (34), ஹர்ஷ் துபே (18) சற்று கைகொடுத்தனர். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணி சார்பில் ஷிவம் துபே, 5 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ஆயுஷ் (9), ஆகாஷ் ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் ரகானே (18), சூர்யகுமார் (0), ஷிவம் துபே (0) கைவிட்டனர். ஷர்துல் 37 ரன் எடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 188/7 ரன் எடுத்து, 195 ரன் பின்தங்கி இருந்தது. ஆகாஷ் (67) அவுட்டாகாமல் இருந்தார்.
அசாருதீன் சதம்
ஆமதாபாத்தில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் கேரளா, குஜராத் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 206/4 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்திலும் கேரள அணியினர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சல்மான் (52) அரைசதம் அடித்தார்.
முகமது அசாருதீன் சதம் அடித்தார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் கேரள அணி முதல் இன்னிங்சில் 418/7 ரன் (177 ஓவர்) எடுத்திருந்தது. அசாருதீன் (149 ரன், 303 பந்து), ஆதித்யா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.