/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸி., * அதிவேக சதம் விளாசினார் பிரவிஸ்
/
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸி., * அதிவேக சதம் விளாசினார் பிரவிஸ்
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸி., * அதிவேக சதம் விளாசினார் பிரவிஸ்
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸி., * அதிவேக சதம் விளாசினார் பிரவிஸ்
ADDED : ஆக 12, 2025 11:08 PM

டார்வின்: பிரவிசின் அதிவேக சதம் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது 'டி-20' போட்டியில் ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது (1-0). நேற்று இரண்டாவது போட்டி டார்வினில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
பிரவிஸ் விளாசல்
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (18), ரிக்கிள்டன் (14) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பிரிட்டோரியஸ் (10) ஏமாற்ற, தென் ஆப்ரிக்க அணி 7 ஓவரில் 57/3 என திணறியது. பின், பிரவிஸ், ஸ்டப்ஸ் இணைந்தனர். ஜாம்பா, அபாட் பந்துகளை சிக்சருக்கு விரட்டினார் பிரவிஸ். மேக்ஸ்வெல் 12வது ஓவரை வீசினார். இதில் பிரவிஸ், 6, 6, 4, 6 என தொடர்ந்து விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன.
அடுத்து வந்த ஹேசல்வுட் ஓவரில், பிரவிஸ் 4, 2, 4, 6 என ரன் மழை பொழிந்தார்.
திவார்ஷுயிஸ் ஓவரில் 3 பவுண்டரி அடித்த பிரவிஸ், 41வது பந்தில் சதம் கடந்தார். 4வது விக்கெட்டுக்கு 126 ரன் (57 பந்து) சேர்த்த போது, ஜாம்பா சுழலில் ஸ்டப்ஸ் (31) அவுட்டானார்.
துசென் (5), ரபாடா (5) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. பிரவிஸ் (56 பந்தில் 125 ரன், 8X6, 12X4, ஸ்டிரைக் ரேட் 223.21) அவுட்டாகாமல் இருந்தார். திவார்ஷுயிஸ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
டேவிட் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ் (22), டிராவிஸ் ஹெட் (5) ஜோடி துவக்கம் தர, கிரீன் (9) நிலைக்கவில்லை. டிம் டேவிட் 24 பந்தில் 50 ரன் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல் 16 ரன் மட்டும் எடுத்தார். அடுத்து வந்த கேரி (26) தவிர மற்ற யாரும் போராடவில்லை. ஒருகட்டத்தில் 14.3 ஓவரில் 147/5 என இருந்த ஆஸ்திரேலியா, கடைசி 18 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 17.4 ஓவரில் 165 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. மபகா, கார்பின் தலா 3 விக்கெட் சாய்த்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இளம் வீரர்
சர்வதேச 'டி-20' ல் சதம் அடித்த தென் ஆப்ரிக்க அணியின் இளம் வீரர் ஆனார் பிரவிஸ் (22 ஆண்டு, 105 நாள்). இதற்கு முன் 2012ல் லெவி (24 ஆண்டு, 36 நாள்) முதலிடத்தில் இருந்தார்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர் ஆனார் பிரவிஸ் (125). முன்னதாக டுபிளசி 119 ரன் (2015, எதிர்-வெ.இண்டீஸ்) எடுத்திருந்தார்.
முதல் தோல்வி
சர்வதேச 'டி-20' அரங்கில் தொடர்ந்து 9 வெற்றி பெற்று சாதித்து இருந்தது ஆஸ்திரேலியா. நேற்றைய தோல்வியை அடுத்து, ஆஸ்திரேலியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. இதில் உகாண்டா அணி (தொடர்ந்து 17 வெற்றி) முதலிடத்தில் உள்ளது.