/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
/
கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
கோப்பை வெல்லுமா இந்தியா * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
ADDED : டிச 25, 2025 11:00 PM

திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும் மூன்றாவது 'டி-20' போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி 3-0 என்ற முன்னிலையுடன் கோப்பை வெல்லலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்தன. இந்த இரண்டிலும் வென்ற இந்தியா, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டும் சிறப்பாக உள்ளன.
முதல் போட்டியில் ஜெமிமா (2 போட்டியில் 95 ரன்), அடுத்து ஷைபாலி (78) என இருவரும் தங்களது பேட்டிங்கில் ஜொலித்ததால், இந்தியா, 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தவிர 'சீனியர்' ஸ்மிருதி இன்று மீண்டு வர முயற்சிக்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் இளம் பவுலர்கள் ஸ்ரீசரணி (3 விக்.,), வைஷ்ணவி (2), கிராந்தி (2) என மூவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசுகின்றனர். தீப்திக்கு பதில் களமிறங்கிய ஸ்னே ராணா தன் பங்கிற்கு கைகொடுத்தது வெற்றிக்கு உதவியது.
அணியின் பீல்டிங் மட்டும் ஏமாற்றம் தருகிறது. முதல் போட்டியில் 5 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். கடந்த முறை மூன்று ரன் அவுட் செய்து, மீண்டு வந்தனர். இன்று தமிழகத்தின் கமலினி அறிமுக வாய்ப்பு பெறலாம்.
மீண்டு வருமா
இலங்கை அணி முதல் இரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த போதும், பெரியளவு ஸ்கோர் (121/6, 128/9) எடுக்கவில்லை. கேப்டன் சமாரி (46 ரன்), ஹாசினி (54), ஹர்ஷித்தா (42) சற்று ஆறுதல் தருகின்றனர். 'மிடில் ஆர்டரில்' விக்கெட் சரிவு ஏற்படுவது பெரும் பலவீனம். பவுலிங்கில் காவ்யா மட்டும் 2 விக்கெட் சாய்த்துள்ளார்.
மைதானம் எப்படி
திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் இந்திய ஆண்கள் அணி 4 போட்டியில் பங்கேற்றது. இதில் 3ல் வென்றது (1ல் தோற்றது).
* கடந்த 2023, நவ. 23 க்குப் பின் முதன் முறையாக இங்கு சர்வதேச போட்டி நடக்க உள்ளது.
* இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் முதன் முறையாக இங்கு மோத உள்ளன.
* மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை வர வாய்ப்பு குறைவு (9 சதவீதம்).

